/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளம் தோண்டுவது... புதிய சாலை போடுவது திண்டிவனத்தில் தொடரும் அவலம்
/
பள்ளம் தோண்டுவது... புதிய சாலை போடுவது திண்டிவனத்தில் தொடரும் அவலம்
பள்ளம் தோண்டுவது... புதிய சாலை போடுவது திண்டிவனத்தில் தொடரும் அவலம்
பள்ளம் தோண்டுவது... புதிய சாலை போடுவது திண்டிவனத்தில் தொடரும் அவலம்
ADDED : ஜூலை 30, 2024 06:14 AM

திண்டிவனத்தில், நகராட்சி சார்பில் 265 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் துவங்கி இரண்டு ஆண்டு களுக்கு மேலாகியும், நிர்ணயித்த கெடுவைத் தாண்டி, பணிகள் நிறைவு பெறாமல் ஜவ்வு போல இழுத்துக்கொண்டே செல்கிறது.
பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட நல்ல சாலைகள், பணிகள் முடிவடைந்த பிறகு, மீண்டும் அந்த இடங்களில் புதியதாக தார் சாலை போடும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதற்கிடையில் பாதாள சாக்கடை திட்டத்தை மேற்கொண்டுள்ள குடிநீர் வடிகால் வாரியத்திற்கு, நகராட்சி சார்பில் தரவேண்டிய நிலுவை தொகை 60 கோடி ரூபாய் அளவில் உள்ளது. இந்த தொகையை கொடுத்தால்தான், திட்டபணிகளுக்காக நேரு வீதி உள்ளிட்ட இடங்களில் புதிய சாலைகள் போட முடியும்.
இதற்கிடையே, கடந்த 2 மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த, மொட்டையர் தெரு, மல்லியபத்தன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக தார் சாலை போடப்பட்டது.
தற்போது இந்த சாலையில் நகராட்சியின் குடிநீர் பைப் கொண்டு வருவதற்காக, மொட்டையர் தெருவிலுள்ள புதியதாக போடப்பட்ட தார் சாலையின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு, குடிநீர் பைப் புதைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மல்லியபத்தன் தெருவிலும் தார் சாலை உடைக்கப்பட்டு, பைப் புதைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் மீண்டும் புதியதாக சாலை போட வேண்டியுள்ளது. வருங்காலத்தில் நகராட்சி முன்கூட்டியே குடிநீர் பைப் போடும் இடங்களை கண்டறிந்து, பைப் போட்ட பிறகு, புதிய தார் சாலை போட்டால், நகராட்சியின் வரிப்பணம் வீணாக வாய்ப்பு இருக்காது என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

