வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்கள்... எதிர்பார்ப்பு :நிரந்தர வேலை வாய்ப்புக்கு நடவடிக்கை தேவை
வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்கள்... எதிர்பார்ப்பு :நிரந்தர வேலை வாய்ப்புக்கு நடவடிக்கை தேவை
UPDATED : ஜூலை 13, 2026 03:17 AM
ADDED : ஜூலை 12, 2026 05:51 PM

- நமது நிருபர் -:
விழுப்புரம் மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை அரசு உருவாக்கிட வேண்டும். தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில்கள் அமைந்துள்ளன.
பருவ மழை மாற்றம், ஏரி, குளங்களுக்கு மழை நீர் செல்லும் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு, விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால், பயிர் சாகுபடி சவாலாக மாறிவிட்டது.
இது போன்ற பல்வேறு பிரச்னைகளால் கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்புகள் படிப்படியாக குறைந்து போனது. குடும்பச் சூழ்நிலை காரணமாக, குறைந்த ஊதியமாக இருந்தாலும் கூட, கிராமப்புற இளைஞர்கள் பலரும், பெரு நகரங்களுக்கு வேலை தேடிச் செல்லும் நிலை உருவாகி விட்டது.
தற்போதைய நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை விட அதிகரித்துள்ளது. இந்த பிரச்னையை சமாளிக்கும் வகையில், அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து, தமிழக அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்டத்தில் நலிவுற்றோர் நிதி வழங்கப்படுகிறது. அரசு சார்பில், ஆதரவற்ற விதவை, கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளி, பழங்குடியினர், திருநங்கைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் தனிநபர் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல், மத்திய அரசு பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தச்சர், கொல்லர், தையல்காரர், குயவர் உட்பட 18 வகை கைவினைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்ளுக்கு, உபகரணங்கள் வாங்குவதற்கு 15 ஆயிரம் ரூபாய் நிதி உதவி, 5 சதவீத வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் 2 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச வீடு, தீன்தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், வறுமைக் கோட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற ஏராளமான மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோதும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை.
இந்த பிரச்னையை சமாளிப்பதற்கு, நிரந்த வேலை வாய்ப்பை உருவாக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு, அரசு வழங்கும் நலத்திட்டங்கள், மாநிய உதவிகள், தொழில் கடனுதவி குறித்து அறிந்திருக்கவில்லை.
அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி, பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்திட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
