/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுார் கோவிலில் மயானக் கொள்ளை
/
மேல்மலையனுார் கோவிலில் மயானக் கொள்ளை
ADDED : பிப் 28, 2025 05:45 AM

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று மயானக் கொள்ளை நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி தேர் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 10:30 மணிக்கு கோவிலில் இருந்து சிம்ம வாகனத்தில் விஸ்வரூப கோலத்தில் அங்காளம்மன் மயானத்திற்கு புறப்பாட்டார்.
அம்மனுக்கு முன்பாக பூசாரிகள் பிரம்ம கபாலத்துடன் ஆடியபடி வந்தனர். வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாணயங்கள், காய்கறி மற்றும் உணவு பொருட்கள், தானியங்களை வாரி இறைத்தும், சேவல்களை வீசியும் காணிக்கை செலுத்தினர்.
காலை 10.50 மணிக்கு அங்காளம்மன் மயானத்தில் எழுந்தருளியதும், அங்கு குவித்து வைத்திருந்த காய்கறிகள், பழங்கள், தானியங்களை வைத்து படையலிட்டு பூசாரிகளும், பொது மக்களும் கொள்ளை விட்டனர்.
அப்போது பிரம்ம கபாலத்தை அங்காளம்மன் ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது திரளான பக்தர்கள் பங்கேற்றனர். டி.எஸ்.பி.,க்கள் கார்த்திகா பிரியா, ஞானவேல் தலைமையில் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.