/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எல்லீஸ் அணைக்கட்டு கட்டுமானப் பணி முதன்மைச் செயலர் ஆய்வு
/
எல்லீஸ் அணைக்கட்டு கட்டுமானப் பணி முதன்மைச் செயலர் ஆய்வு
எல்லீஸ் அணைக்கட்டு கட்டுமானப் பணி முதன்மைச் செயலர் ஆய்வு
எல்லீஸ் அணைக்கட்டு கட்டுமானப் பணி முதன்மைச் செயலர் ஆய்வு
ADDED : மே 10, 2024 01:03 AM

திருவெண்ணெய்நல்லுார்: விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டுமான பணிகளை முதன்மைச் செயலர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா நேற்று ஆய்வு செய்தார்.
விழுப்புரம் அடுத்த ஏனாதிமங்கலம் மற்றும் கப்பூர் கிராமங்களுக்கிடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1949 - 1950ம் ஆண்டு எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது.
இந்த அணைக்கட்டில் உள்ள வலதுபுற பிரதான கால்வாய்கள் எரளூர், ரெட்டி ஆகிய 2 வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடதுபுற பிரதான கால்வாய்கள் ஆழங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் ஆகிய மூன்று வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கும் மொத்தம் 13 ஆயிரத்து 100 ஏக்கரில் பாசன வசதி பெறுகிறது.
கடந்த 2021ம் ஆண்டு பெய்த கனமழையையொட்டி, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இந்த அணைக்கட்டு சேதமானது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2023-24ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் சேதமான அணைக்கட்டை 86.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்ய அறிவித்து, அரசாணையும் வழங்கப்பட்டது.
இதையொட்டி, ஏனாதிமங்கலத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டுமான பணிகளை முதன்மைச் செயலர் ஹர்சகாய் மீனா நேற்று பார்வையிட்டார்.
அவர் தற்போதுவரை நடந்த பணிகளின் விபரம், கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் விபரம் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தற்போது வரை 70 சதவீதம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளேன்' என்றார்.