/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆசிரியை வீட்டில் நகை, பணம் கொள்ளை
/
ஆசிரியை வீட்டில் நகை, பணம் கொள்ளை
ADDED : ஆக 13, 2024 06:18 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி மைதிலி, 50; திருப்பாச்சனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.
இவரது கணவர் சுரேஷ், மகன் வெற்றிவேல் ஆகியோர் சென்னை, முடிச்சூரில் தங்கி, பணிபுரிகின்றனர்.
சில தினங்களுக்கு முன் மைதிலி, வீட்டை பூட்டிக் கொண்டு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் பணியின் காரணமாக பயிற்சிக்கு சென்றிருந்தார்.
நேற்று காலை 8:00 மணிக்கு மைதிலி வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், மைதிலிக்கு தகவல் தெரிவித்தனர்.
மைதிலியின் உறவினர், வீட்டிற்கு சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த நான்கரை சவரன் நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
விழுப்புரம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.