/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வர் அமெரிக்கா சென்றாலும் தமிழக மக்கள் பற்றியே சிந்திக்கிறார் அமைச்சர் பொன்முடி பேச்சு
/
முதல்வர் அமெரிக்கா சென்றாலும் தமிழக மக்கள் பற்றியே சிந்திக்கிறார் அமைச்சர் பொன்முடி பேச்சு
முதல்வர் அமெரிக்கா சென்றாலும் தமிழக மக்கள் பற்றியே சிந்திக்கிறார் அமைச்சர் பொன்முடி பேச்சு
முதல்வர் அமெரிக்கா சென்றாலும் தமிழக மக்கள் பற்றியே சிந்திக்கிறார் அமைச்சர் பொன்முடி பேச்சு
ADDED : செப் 09, 2024 05:42 AM
விழுப்புரம்: 'முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றாலும், தமிழக மக்களைப் பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்' என அமைச்சர் பொன்முடி பேசினார்.
விழுப்புரம் அடுத்த பில்லுரில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தொடங்கி வைத்து, அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
தமிழகத்தின் கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் விதமாக, முதல்வரின் முகவரித்துறை சார்பில், மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்போது, பொது மக்களை, அதிகாரிகள் தேடிவந்து குறைகளை கேட்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஜூலை 16ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டு 13 ஒன்றியங்களில் 91 முகாம்கள் நடைபெற்று வருகிறது. 15 அரசுத்துறை சார்ந்த 44 சேவைகள் குறித்து மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 87 முகாம்கள் நடத்தப்பட்டு, 57 ஆயிரத்து 811 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விழுப்புரம் தொகுதியில் 3,465 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, உடனடி நடவடிக்கை அடிப்படையில் 1670 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள மனுக்கள் அனைத்தும் விரைவில் தீர்வு காணப்படும். முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றாலும், தமிழக மக்களைப் பற்றி தான் அவரது நினைவுகள் உள்ளது.
தமிழக மக்களுக்காக, மகளிருக்காக மாதம் 1,000 ரூபாய் உரிமை தொகை, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டம், மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டம் என பல திட்டங்கள் தொடர்ந்து வருகிறது. இவ்வாறு பொன்முடி பேசினார்.