/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் கிளை சிறை திறப்பு
/
திண்டிவனத்தில் கிளை சிறை திறப்பு
ADDED : ஜூலை 20, 2024 05:43 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் புதிய கிளைச் சிறை திறப்பு விழா நடந்தது.
கடந்த ஆட்சியில், 2017ம் ஆண்டு, திண்டிவனம் - விழுப்புரம் சாலை ஜக்காம்பேட்டையில் புதிதாக ஒருங்கிணைந்த கோர்ட் திறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அதன் அருகிலேயே இரண்டரை ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு காவலர் வீடு வசதி கழகத்தின் சார்பில், 8 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில், புதியதாக கிளைச்சிறை கட்டும் பணி கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்டு 2022ம் அக்டோபர் மாதம் கட்டி முடிக்கப்பட்டது.
கட்டடம் கட்டி 18 மாதங்கள் ஆகியும், புதிய கிளைச்சிறை திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், சென்னையில் முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் நேற்று காலை திறந்து வைத்தார்.
இதையொட்டி, திண்டிவனம் புதிய கிளைச் சிறையில் நடந்த நிகழ்ச்சிக்கு, சிறைத்துறை வேலுார் சரக டி.ஐ.ஜி.,ராஜலட்சுமி தலைமை தாங்கி ,குத்துவிளக்கேற்றி வைத்தார்.
கடலுார், விழுப்புரம் மாவட்ட சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, திண்டிவனம் கிளை கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் சிறைத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.
கைதிகளை மாற்றுவதில் சிக்கல்
சிறை கட்டி முடிக்கப்பட்டு 18 மாதங்கள் பயன்படுத்தாமல் இருந்ததால், மின் இணைப்புகள், ஒயர்கள் பழுதடைந்து விட்டது. இதனால் மின் இணைப்பின்றி உள்ளது.
இதை சரி செய்வதற்கு ஒரு வாரத்திற்கு மேலாகும் என்பதால், உடனடியாக திண்டிவனம் நேரு வீதியில் உள்ள பழைய கிளைச் சிறையில் உள்ள விசாரணைக் கைதிகளை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.