/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதிய பஸ்கள் இயக்காததால் விழுப்புரத்தில் பயணிகள் மறியல்
/
போதிய பஸ்கள் இயக்காததால் விழுப்புரத்தில் பயணிகள் மறியல்
போதிய பஸ்கள் இயக்காததால் விழுப்புரத்தில் பயணிகள் மறியல்
போதிய பஸ்கள் இயக்காததால் விழுப்புரத்தில் பயணிகள் மறியல்
ADDED : ஏப் 20, 2024 06:22 AM

விழுப்புரம், : சென்னையிலிருந்து திருச்சி மார்க்கத்துக்கு, போதிய பஸ்கள் இல்லாததால், தவிப்புக்குள்ளான பயணிகள், விழுப்புரத்தில் பஸ்களை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், லோக்சபா தேர்தலையொட்டி வெளியூர்களுக்கு செல்லும் ஏராளமான பயணிகள் நேற்று காலை 10:00 மணி முதல் திருச்சி, கரூர், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல பயணிகள் திரண்டிருந்தனர்.
போதிய பஸ் இல்லாததால் 200க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். நீண்டநேரம் பஸ்கள் இல்லாததால் மதியம் 12:30 மணியளவில், பஸ் நிலையத்துக்கு வெளியே வந்து, திருச்சி, சென்னை மார்க்கமாக வந்த பஸ்களை மறித்து, திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பஸ் இல்லாத விரக்தியில் இருந்த பயணிகள், அந்த வழியாக வந்த பஸ்களை மறித்தும், பஸ் டிரைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார், அவர்களை சமாதானப்படுத்தினர். இதனையடுத்து, திருச்சி, கள்ளக்குறிச்சி நோக்கி வந்த பஸ்களில், கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல், பயணிகள் புறப்பட்டு சென்றனர்.
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலர்கள் வந்து, மாற்று பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 950 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவித்தும், போதிய பஸ்சின்றி பயணிகள் தவித்தனர்.

