/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அடிப்படை வசதியின்றி பழைய பஸ் நிலையம் விழுப்புரத்தில் மக்கள் அவதி
/
அடிப்படை வசதியின்றி பழைய பஸ் நிலையம் விழுப்புரத்தில் மக்கள் அவதி
அடிப்படை வசதியின்றி பழைய பஸ் நிலையம் விழுப்புரத்தில் மக்கள் அவதி
அடிப்படை வசதியின்றி பழைய பஸ் நிலையம் விழுப்புரத்தில் மக்கள் அவதி
ADDED : மார் 10, 2025 05:54 AM
விழுப்புரம்: விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி மற்றும் காத்திருப்பதற்கான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் 60 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருகிறது. கடந்த 2000ம் ஆண்டு, கலெக்டர் அலுவலகம் அருகே புதிய பஸ் நிலையத்தை, அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். அங்கு தொலைதுார ஊர்களுக்கான பஸ்கள் வந்து செல்கின்றன.
அதனைத் தொடர்ந்து, பழைய பஸ் நிலைய வளாகத்தில் இருந்த கடைகளை இடித்து அகற்றிவிட்டு, 50க்கும் மேற்பட்ட புதிய கடைகள் கட்டப்பட்டன. இந்த வணிக வளாகம் மூலம் ஆண்டுதோறும் 50 லட்சம் ரூபாய் வரை வாடகை தொகை பெறும் வகையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதில் இருந்து வரும் தொகையில், இங்கு வரும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்வதில் அக்கறை செலுத்தப்படவில்லை.
பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் கிராம மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்படவில்லை. கட்டண கழிவறை இருந்தும், முறையாக பராமரிக்கப்படவில்லை.
இங்கு பழைய பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டு, சிறிய அளவிலான நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. அந்த நிழற்குடையில் போதுமான அளவில் இருக்கை வசதிகள் இல்லை. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்தாண்டு, நகரமன்ற கூட்டத்தில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் பஸ்கள் வந்து செல்லும் விபரம் அடங்கிய பெயர் பலகை வைக்கப்படும், குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், இப்பணிகள் நிறைவேற்றப்படவில்லை.
எனவே, விழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில், பயணிகளுக்கு போதிய நிழற்குடை, இருக்கை வசதி, குடிநீர், இலவச கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.