/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
த.வெ.க., முதல் மாநாட்டிற்கு அனுமதி கோரி விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு
/
த.வெ.க., முதல் மாநாட்டிற்கு அனுமதி கோரி விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு
த.வெ.க., முதல் மாநாட்டிற்கு அனுமதி கோரி விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு
த.வெ.க., முதல் மாநாட்டிற்கு அனுமதி கோரி விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு
ADDED : ஆக 29, 2024 06:52 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடைபெற உள்ள த.வெ.க., மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகங்களில் மனு அளித்தார்.
எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி., திருமாலிடம், அளித்த மனு விபரம்;
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் அடுத்த வி.சாலை கிராமத்தில் வரும் செப்., 23ம் தேதி நடத்த திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்கிறார்.
மாநாடு நடத்த 85 ஏக்கர் நிலம் வாடகைக்கு பெற்றுள்ளோம். மாநாட்டிற்கு 1.50 லட்சம் பேர் வருவார்கள் என, எதிர்பார்க்கிறோம். மாநாட்டிற்கு தமிழகம் முழுதும் இருந்து வரும் வாகனங்களை முறையாக நிறுத்த ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக விழுப்புரம்-சென்னை சாலையின் இடதுபுறம் 28 ஏக்கர் நிலமும், வலது புறத்தில் 40 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு பெற்றுள்ளோம். அதில், தமிழகத்தின் தென் பகுதியில் இருந்து வரும் வாகனங்களை இடது புறத்திலும், வடமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை வலது புறத்திலும் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களை நிறுத்த தனியாக 5 ஏக்கர் நிலம் வாடகைக்கு பெற்றுள்ளோம்.
மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகள், பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி வந்து செல்ல வசதியாக மாநாட்டு திடலுக்கு உள்ளே செல்லவும், வெளியே வரவும் தலா மூன்று வழிகள் அமைக்கப்பட உள்ளது.
மாநாட்டிற்கு போலீசார் தரப்பில் இருந்து தாங்கள் கொடுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறின்றி மாநாட்டை முறையாக நடத்துவதாக உறுதியளிக்கிறோம். எனவே, எஸ்.பி., மாநாட்டிற்கு தேவையான முழு பாதுகாப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மாநாட்டிற்கு அனுமதி கோரி கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதியிடம் மனு அளித்தனர்.
அப்போது விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணிபாலாஜி, மாவட்ட தலைவர் குஷிமோகன், துணை தலைவர் வடிவேல், இளைஞரணி மாவட்ட தலைவர்கள் விழுப்புரம் சுரேஷ், கள்ளக்குறிச்சி மோகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து, மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது,
த.வெ.க.,வின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடத்த பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளோம். மாநாடு நடைபெறும் இடம், தேதி குறித்து முறையாக, தலைவர் விஜய் அறிவிப்பார் என தெரிவித்தார்.
இந்நிலையில் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை கூடுதல் எஸ்.பி., திருமால் நேற்று மாலை ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.