/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நகராட்சி நிதி வழங்காததால் சிக்கல்: திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தாமதம்
/
குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நகராட்சி நிதி வழங்காததால் சிக்கல்: திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தாமதம்
குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நகராட்சி நிதி வழங்காததால் சிக்கல்: திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தாமதம்
குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நகராட்சி நிதி வழங்காததால் சிக்கல்: திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தாமதம்
ADDED : ஆக 10, 2024 05:28 AM

திண்டிவனம்: திண்டிவனம் பாதாள சாக்கடை திட்டத்திற்கான நிதியை குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நகராட்சி வழங்காததால், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், தினந்தோறும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆட்சியில் திண்டிவனம் நகராட்சி சார்பில் 265 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக, குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவை மீறி தொடர்ந்து ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகிறது.
இப்பணியால், நகரில் அனைத்து வார்டுகளிலும் சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு மேன் ேஹால் மற்றும் பைப் லைன் புதைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிவடைந்த சாலைகளில், புதியதாக தார் சாலைகள் போடப்பட்டது. இதே போல் புதியதாக போடப்பட்ட சில தார் சாலைகளை மீண்டும், குடிநீர் பைப் புதைப்பதற்காக தோண்டப்பட்டதால், மீண்டும் பழைய நிலைமைக்கு சாலைகள் குண்டும், குழியுமானது.
நகரத்தின் முக்கிய போக்குவரத்து சாலைகளான நேரு வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, ராஜாஜி வீதி ஆகிய இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் முடிவடைந்து 3 மாதங்களாகிவிட்ட நிலையில், சாலைகள் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை வசம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டு விட்டது.
இந்த சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினர்தான் போட வேண்டும். சாலை போடுவதற்கான நிதியை நகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியத்திடம் வழங்க வேண்டும். அதன் பிறகு நெடுஞ்சாலைத்துறைக்கு போதுமான நிதியை வாரியம் கொடுக்க வேண்டும். ஆனால், இதுவரை நகராட்சி சார்பில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நிதியை வழங்கவில்லை.
இதனால் பழுதடைந்த சாலைகளை சீரமைத்து புதிய சாலைகள் போடுவதில் இழுபறி நீடித்து வருகிறது.
இதுபற்றி திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் சமீபத்தில் சென்னையில் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலரை நேரில் சந்தித்து, நகராட்சி வழங்க வேண்டிய நிதியை குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தார்.
ஆனால், குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நிதி உடனடியாக வழங்க முடியாத நிலை உள்ளதால், பழுதான போக்குவரத்து சாலைகளை சீரமைப்பதில் மேலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், நேரு வீதியில் புதிய சாலை உடனடியாக போட வலியுறுத்தும் வகையில், வரும் 13ம் தேதி திண்டிவனத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முதல் கட்டமாக போக்குவரத்து மிகுந்த சாலைகளில் புதிய சாலை போடுவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

