/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மண் பானைகள், குடிநீர் பாட்டில்கள் விற்பனை... அதிகரிப்பு; வெளி மாவட்டங்களுக்கும் செல்வதால் தட்டுப்பாடு
/
மண் பானைகள், குடிநீர் பாட்டில்கள் விற்பனை... அதிகரிப்பு; வெளி மாவட்டங்களுக்கும் செல்வதால் தட்டுப்பாடு
மண் பானைகள், குடிநீர் பாட்டில்கள் விற்பனை... அதிகரிப்பு; வெளி மாவட்டங்களுக்கும் செல்வதால் தட்டுப்பாடு
மண் பானைகள், குடிநீர் பாட்டில்கள் விற்பனை... அதிகரிப்பு; வெளி மாவட்டங்களுக்கும் செல்வதால் தட்டுப்பாடு
ADDED : மே 02, 2024 07:12 AM

விழுப்புரம் : கோடை வெயில் காரணமாக, டேப் பொருத்திய மண் பானைகள், மண் குடிநீர் பாட்டில்கள் விற்பனை விழுப்புரத்தில் அதிகரித்துள்ளது. வெளி மாவட்டங்களுக்கும் அனுப்புவதால், விற்பனை அதிகரித்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து சுட்டெரித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக 104 டிகிரி பாரன்ஹீட் அளவில் தொடர்ந்து வெப்பம் பதிவாகி வருகிறது. கடும் கோடை வெயில் காரணமாக தண்ணீர், பழங்கள், நுங்கு, தர்பூசணி, மோர், வெள்ளரி பழம், முலாம் பழம் என, பொது மக்கள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதன் விற்பனையும் அதிகரித்துள்ளது.
கோடை வெயிலின் தாகத்தை தணிப்பதற்கும், பாரம்பரிய இயற்கை வழி குடிநீர் வழங்கும் மண் பானைகள் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இந்தாண்டு, வழக்கமான மண் பானைகளை விட, குடிநீர் திறப்பு பொருத்திய (டேப்) பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
விழுப்புரம் அருகே சாலை அகரம், ராகவன்பேட்டை பகுதியில் வசித்து வரும் மண்பாண்ட தொழிலாளர்கள், ஆண்டு தோறும் தங்கள் மண்பாண்ட தயாரிப்புகளில், கோடையில் பிரத்யேக குடிநீர் மண் பானைகள் தயாரித்து விற்பதை அதிகளவில் செய்து வருகின்றனர்.
இந்தாண்டு, மண் பானையில் டேப் பொருத்திய குடிநீர் மண் பானைகள் அதிகளவில் தயாரித்தும், விற்பனையும் செய்கின்றனர். 5 லிட்டர் முதல் 25 லிட்டர் கொள்ளளவுகளில், இந்த மண் பானைகள் தயாரித்து விற்கின்றனர். இந்த பானைகள் ரூ.150 முதல் ரூ.250 வரை விற்கின்றனர். அதனுடன், மண் பாத்திர குடிநீர் பாட்டில்களும் தயாரித்து விற்கின்றனர். அரை லிட்டர் ரூ.80க்கும், ஒரு லிட்டர் ரூ.120க்கும் விற்கின்றனர்.
இது குறித்து, சாலை அகரம் மண்பாண்ட தொழிலாளி மணிகண்டன் கூறியதாவது: விழுப்புரத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, 3 தலைமுறையாக, பல குடும்பத்தினர் மண்பாண்ட தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். மண்பாண்டங்கள் விற்பனை முடங்கிவிட்டதால், வீடுகளுக்கான மண் அலங்கார பொருட்கள், சமையல் பொருட்கள், டெரகோட்டா விளையாட்டு பொருட்கள் தயாரித்து விற்று வருகிறோம். கோடை காலங்களில் மண் பானை விற்பனை நடக்கிறது. தற்போது, குழாய் பொருத்திய மண் பானை தான் அதிகளவில் விற்கிறது. 18 லிட்டர், 12 லிட்டர், 8 லிட்டர் அளவுகளில் மண் பானைகள் தயாரித்து விற்கிறோம்.
வழக்கம் போல் ஏரிகளில் மண் எடுத்து வந்து, மண் பானை தயாரித்து, அதில் டேப் பொருத்தி பிறகு சூளையிட்டு, விற்பனைக்கு வழங்குகிறோம். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து விற்பனை நடந்து வருகிறது. கடந்த 10 நாள்களாக விற்பனை அதிகரித்துள்ளது. பானைகள் தயாரித்து வழங்க தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மட்டுமின்றி, கடலுார் , ஈரோடு, சேலம், புதுச்சேரி, நாமக்கல், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ஏற்றி அனுப்பி வருகிறோம். அதிகளவில் பானைகள் விற்றுள்ளது. இயற்கையாக தண்ணீர் ஊற்றி பயன்படுத்துவதால், மக்கள் அதிகம் விரும்புகின்றனர். வழக்கம்போல், பானை தயாரிப்புக்கான மண் கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளது. பண்ருட்டி, பட்டாம்பாக்கம் பகுதிகளில் இருந்து மண் எடுத்து வந்து செய்கிறோம் என்றார்.

