/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தலைவிரித்தாடும் கட்டப்பஞ்சாயத்து
/
தலைவிரித்தாடும் கட்டப்பஞ்சாயத்து
ADDED : செப் 17, 2024 04:16 AM
கட்டப்பஞ்சாயத்தும், கள்ளச்சாராயமும் போலீசாருக்கு எப்போதும் சவாலானவை. ஆட்சியாளர்களுக்கும் கெட்ட பெயரை வாங்கி கொடுத்து விடும். மரக்காணம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு பிறகு தமிழக அரசு விழித்து கொண்டது.
போலீஸ் உயர் அதிகாரிகளை மாற்றியதுடன், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் தனி கவனம் செலுத்தி வருவதால், விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய பிரச்னை கட்டுங்குள் வந்துள்ளது.
அதே நேரம் கட்டப்பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன்களில் தலைவிரித்தாடுகிறது.
ஒவ்வொரு ஸ்டேஷன்களில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு சிலர் ஸ்டேஷன்களில் செல்வாக்கு பெற்றவர்களாக இருப்பார்கள்.
ஆனால், தற்போது, கட்சி பாகுபாடின்றி கட்டப்பஞ்சாயத்து குழுக்கள் உருவாகிவிட்டன. ஸ்டேஷன் வாசலிலேயே காத்திருக்கும் இவர்கள் காதல், கடன், அடிதடி, மண் கடத்தல் என எந்த பிரச்னையானலும் தலையிடுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவோ, எதிராகவே ் தலையிடும் இவர்களே, வழக்கு போடுவதா வேண்டாமா என்பதை முடிவு செய்கின்றனர்.
ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர் பிரச்னையை தாங்களே பார்த்து கொள்கிறோம் என்றாலும் கட்டப்பஞ்சாயத்து கும்பல் விடுவதில்லை.
புகார்தாரருக்கு உதவுவதை போல் பிரச்னையில் ஒரு தரப்பினர் களம் இறங்கும் அதே நேரம், எதிர்தரப்பினருக்கு ஆதரவாக மற்றொரு கட்டப்பஞ்சாயத்து குழு ஆஜராகி விடுகின்றது.
இரு குழுக்களும் ஒன்றாக பேசி முடிவு செய்கின்றனர். பல நேரம் பாதிக்கப்பட்டவரை மிரட்டியும், நிர்பந்தப்படுத்தியும் ஒருதலை பட்சமாக முடிவு எடுக்க வைத்து, கணிசமான தொகையை கறந்து விடுகின்றனர்.
இதற்கு, சமாதான பேச்சு என பெயர் வைத்துள்ள போலீசார், கட்டப்பஞ்சாயத்து செய்வற்கு ஏதுவாக பேச்சு வார்த்தை முடியும் வரை புகார் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் போலீசாருக்கு புரோக்கர்களாக செயல்படுவதால், இவர்களுக்கு போலீசார் ராஜமரியாதை கொடுக்கின்றனர். இவர்கள் என்ன முடிவு செய்கின்றனரோ அதையே போலீசார் செய்கின்றனர்.
போலீஸ் ஸ்டேஷன்களில் தலைவிரித்தாடும் கட்டப்பஞ்சாயத்து கலாசாரத்தால் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த எஸ்.பி., கட்டப்பஞ்சாயத்து ஆசாமிகளுடன் நெருக்கமாக உள்ள போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கட்டப்பஞ்சாயத்து கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
-நமது நிருபர்-