/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துப்புரவு தொழிலாளர்கள் மறியல் விழுப்புரத்தில் பரபரப்பு
/
துப்புரவு தொழிலாளர்கள் மறியல் விழுப்புரத்தில் பரபரப்பு
துப்புரவு தொழிலாளர்கள் மறியல் விழுப்புரத்தில் பரபரப்பு
துப்புரவு தொழிலாளர்கள் மறியல் விழுப்புரத்தில் பரபரப்பு
ADDED : ஆக 29, 2024 11:51 PM

விழுப்புரம்: ஊதியம் வழங்காததை கண்டித்து, விழுப்புரத்தில், ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தில், தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்பட்ட ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் 270 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் 10ம் தேதிக்குள் நகராட்சி நிர்வாகம், தனியார் நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கி வருகிறது.
கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதிகாரிகளை கேட்டால் சரியாக காரணம் கூற மறுப்பதாக கூறி, நேற்று காலை 11:30 மணியளவில் விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முன் உள்ள சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த, விழுப்புரம் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும், கலைந்து செல்லவில்லை.
பின், சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஸ்ரீபிரியா, துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், கடந்த ஜூன் மாதத்திற்கான ஊதியம், தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த நிறுவனத்தார், வெளிநாட்டில் இருந்ததால் தொழிலாளர்களுக்கு வழங்க முடியவில்லை.
ஜூலை மாத ஊதியம் வழங்க வேண்டிய நிலையில், நகராட்சி கமிஷனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இதுவும் தற்போது சரி செய்யப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் துப்புரவு தொழிலாளர்களுக்கு 2 மாத ஊதியமும், இனி மாதம் தோறும் 10ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இதையடுத்து, மதியம் 12:00 மணிக்கு தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.