/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குரங்குகள் அட்டகாசத்தால் கிராம மக்கள் கடும் அவதி
/
குரங்குகள் அட்டகாசத்தால் கிராம மக்கள் கடும் அவதி
ADDED : ஜூலை 02, 2024 06:16 AM
விழுப்புரம் அருகே குரங்குகள் அதிகரித்து அட்டகாசம் செய்வதால், அதனை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் அருகே வாணியம்பாளையம் கிராமத்தில், கடந்தாண்டு 40க்கும் மேற்பட்ட குரங்குகள் முகாமிட்டு சேட்டை செய்து வந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து, விழுப்புரம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, அதன்படி அவர்கள் ஒரு நாள் வந்து, கூண்டு வைத்து 30 குரங்குகளை பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர். அப்போது, 10க்கும் மேற்பட்ட குரங்குகளை அவர்கள் பிடிக்காமல் விட்டுச் சென்றனர். இந்த நிலையில் மீண்டும் அந்த குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது 30க்கும் மேற்பட்ட குரங்குகளாக பெருகி பொது மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது.
வீடுகள், கடைகளில் உள்ளே புகுந்தும், வீடுகளில் உலர்த்துவதற்கு வைக்கும் தானியங்கள், பழங்கள், மளிகை பொருள்கள் என அனைத்தையும் எடுத்துச் செல்கின்றன. இப்படி வாணியம்பாளையம், மழவராயனுார் , கனகம்பாளையம், ப.வில்லியனுார் உள்ளிட்ட கிராமங்களில் குரங்குகள் அதிகரித்துள்ளதால், அவைகளுக்குள் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்கின்றன, பொது மக்களையும் அவைகள் கடிக்கும் வகையில் அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.