/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் ஓட்டு எண்ணும் மையத்தில் கேமரா கண்காணிப்பு காட்சி தெரியாததால் பரபரப்பு
/
விழுப்புரம் ஓட்டு எண்ணும் மையத்தில் கேமரா கண்காணிப்பு காட்சி தெரியாததால் பரபரப்பு
விழுப்புரம் ஓட்டு எண்ணும் மையத்தில் கேமரா கண்காணிப்பு காட்சி தெரியாததால் பரபரப்பு
விழுப்புரம் ஓட்டு எண்ணும் மையத்தில் கேமரா கண்காணிப்பு காட்சி தெரியாததால் பரபரப்பு
ADDED : மே 04, 2024 07:05 AM

விழுப்புரம் : விழுப்புரம் ஓட்டு எண்ணும் மையத்தில், யு.பி.எஸ்., மின் சாதனத்தில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் 'டிவி'க்களில் தெரியாததால் 20 நிமிடம் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் (தனி) தொகுதிக்கு நடந்த லோக்சபா தேர்தலில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 6 சட்டசபை தொகுதிக்கான இயந்திரங்கள், தனித்தனி பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டு, 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டு கண்காணித்து வருகின்றனர்.
ஒவ்வொரு அறை முன்பும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. இந்த 6 தொகுதி பாதுகாப்பு அறைகளின் கண்காணிப்பும், ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள ஒரு கண்காணிப்பு அறையில், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் சுழற்சி முறையில் பார்வையிட்டு வருகின்றனர்.
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி, தினமும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை 9:30 மணிக்கு, திடீரென கண்காணிப்பு அறையில் இருந்த 'டிவி'க்களில் கேமரா காட்சிகள் தெரியாததால் பரபரப்புநிலவியது.
இதுகுறித்து, முகவர்கள் அளித்த தகவலின் பேரில், விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி, எஸ்.பி., தீபக் சிவாச் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அதில், கோடை வெயில் காரணமாக, அங்கு குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டுள்ளது. அதனால், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு அறைக்காக பயன்படுத்திய யு.பி.எஸ்., மின்சாதனம் பழுதாகி, பியூஸ் போயுள்ளது.
இதன் காரணமாக 20 நிமிடம் கண்காணிப்பு காட்சிக்கான 'டிவி' நின்றுள்ளது. உடனே அங்குள்ள மின் ஊழியர்கள் அதனை சரி செய்து, சீரமைத்ததால், மீண்டும் காலை 9:55 மணிக்கு கண்காணிப்பு கேமரா காட்சிகள் செயல்பாட்டுக்கு வந்தன.
இதனையடுத்து, கலெக்டர் பழனி, அங்கிருந்த முகவர்களை, 6 தொகுதி ஸ்டிராங் ரூம்களுக்கும் அழைத்துச் சென்று, பதிவேட்டில் கையெழுத்திட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திவிட்டு வந்தனர். இந்த சம்பவத்தால் மையத்தில் காலை 2 மணிநேரம் பரபரப்புடன் காணப்பட்டது.