/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய வேகத்தில் 50 மீட்டர் 'பறந்தது' டிராக்டர் டிப்பர் விழுப்புரம் அருகே பரபரப்பு
/
எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய வேகத்தில் 50 மீட்டர் 'பறந்தது' டிராக்டர் டிப்பர் விழுப்புரம் அருகே பரபரப்பு
எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய வேகத்தில் 50 மீட்டர் 'பறந்தது' டிராக்டர் டிப்பர் விழுப்புரம் அருகே பரபரப்பு
எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய வேகத்தில் 50 மீட்டர் 'பறந்தது' டிராக்டர் டிப்பர் விழுப்புரம் அருகே பரபரப்பு
ADDED : பிப் 24, 2025 02:43 AM

திருவெண்ணெய்நல்லுார்,: விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற டிராக்டர் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆணைவாரி கிராமத்தில், கடலுார் --- சித்தூர் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இங்கு மேம்பாலம் அமைக்கும் பணி மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.
இதனால் ஆணைவாரி குடியிருப்பு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. ரயில் தண்டவாளத்தை கடக்கும் பகுதியில் தற்காலிக கேட் அமைக்கப்பட்டது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் திறக்கப்பட்ட நிலையில், தற்காலிக ரயில்வே கேட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும், அந்த கேட்டை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தியதால், அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. பொதுமக்கள் ரயில்வே கேட்டை கடந்து செல்லாத வகையில், ரயில்வே நிர்வாகம் சார்பில், ரயில்வே கேட் பகுதியில் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டது.
இந்நிலையில், உளுந்துார்பேட்டை அருகே ஈஸ்வரகண்டநல்லுாரை சேர்ந்த விவசாயி சக்தி, 35, நேற்று மாலை, 3:45 மணியளவில், ஆணைவாரி பகுதிக்கு வைக்கோல் கட்டு ஏற்றுவதற்காக டிராக்டரில் வந்தார். அவர், தடை செய்யப்பட்ட ரயில்வே கேட் வழியாக தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது, டிராக்டர் மற்றும் டிப்பர் ரயில்வே தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது. ரயில் வரும் நேரம் என்பதால், அருகில் இருந்தவர்கள் சென்று டிராக்டரை மட்டும் தண்டவாள பகுதியில் இருந்து மீட்டு வெளியே எடுத்தனர். டிராக்டர் டிப்பரை எடுக்க முடியாததால், தண்டவாளத்தின் குறுக்கே சிக்கிக் கொண்டது.
அந்த நேரத்தில், அவ்வழியாக நாகர்கோவிலில் இருந்து வந்த மும்பை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தின் குறுக்கே நின்ற டிப்பர் மீது அதிவேகமாக மோதியது. இதனால், டிராக்டர் டிப்பர் 50 மீட்டர் துாரம் துாக்கி வீசப்பட்டது. இதில், சேஸ் மற்றும் டிப்பர் பெட்டி இரண்டாக உடைந்தது. உடனடியாக அங்கு ரயில் நிறுத்தப்பட்டது.
திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விழுப்புரம் ரயில்வே போலீசார், சக்தியை கைது செய்தனர். டிரைவர் சாமர்த்தியாக ரயிலை நிறுத்தியதால், அசம்பாவித சம்பவங்கள் நிகழவில்லை. இந்த விபத்து காரணமாக ஒரு மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.
திருச்சி தெற்கு மண்டல ரயில்வே நிர்வாகம் சார்பில் அளித்த புகாரில், விழுப்புரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். டிராக்டர் டிரைவர் குடிபோதையில் டிராக்டரை ஓட்டிச் சென்றதால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

