/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்... இழுபறி; சுத்திகரிப்பு நிலையத்திற்கு இடம் ஒதுக்க தாமதம்
/
விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்... இழுபறி; சுத்திகரிப்பு நிலையத்திற்கு இடம் ஒதுக்க தாமதம்
விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்... இழுபறி; சுத்திகரிப்பு நிலையத்திற்கு இடம் ஒதுக்க தாமதம்
விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்... இழுபறி; சுத்திகரிப்பு நிலையத்திற்கு இடம் ஒதுக்க தாமதம்
ADDED : ஜூலை 02, 2024 11:21 PM

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட ஐந்து ஊராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டினாலும், சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் ஒதுக்க தாமதமாவதால், இழுபறி நீடிக்கிறது.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகள் உள்ளது. நகராட்சியில் கடந்த 2011ம் ஆண்டு புதிதாக பானாம்பட்டு, சாலாமேடு, வழுதரெட்டி, எருமனந்தாங்கல், காகுப்பம் ஆகிய ஐந்து ஊராட்சிகள் இணைக்கப்பட்டது. இந்த ஊராட்சிகளில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் கடந்த 2020ம் ஆண்டு துவங்கியது.
இந்த பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் 263 கோடி ரூபாய்க்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. இந்த திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் 65.75 கோடி ரூபாய் மானியமாகவும், வங்கி மூலம் 163.58 கோடி ரூபாய் கடனாகவும், மீதமுள்ள 33.54 கோடி ரூபாய் நகராட்சி மூலமும் வழங்கப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை திட்டத்திற்கு, கழிவுநீர் செல்லும் பாதைகள் 165.686 கி.மீ., உள்ளன. இதில், 147.667 கி.மீ., பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதே போல், 7,018 மேன்ஹோலில் 6,847 முடிந்ததோடு, 3ல் இரண்டு பம்பிங் நிலைய பணிகள் முடிந்துள்ளன. மேலும், நீர் உந்து நிலையம் 7, இதற்கான மேன்ேஹால் 7, பம்ப் ஹவுஸ் 17 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, புதிதாக இணைக்கப்பட்ட ஐந்து ஊராட்சிகளில் 14 ஆயிரத்து 150 வீடுகளுக்கான பாதாள சாக்கடை இணைப்பு பைப் லைன் பொருத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இங்கு, 98 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 2 சதவீதம் பணிகள் மட்டுமே மீதம் உள்ளது.
இந்த திட்டத்தில், முன்பே பயன்பாட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகே உள்ள பகுதிக்கு வீட்டு இணைப்பு வழங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், 2வது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிலம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது அய்யங்கோவில்பட்டு கிராமம் அருகே இடத்தை தேர்வு செய்வதற்கான ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் இதற்கான இடம் ஒதுக்கீடு செய்தவுடன், மீதமுள்ள பணிகள் முழுவதுமாக முடிவடையும். பின், அந்த ஊராட்சிகளுக்கான பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு விடும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் நகராட்சியில் உள்ள வார்டுகளில் பல இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மேன்ேஹால் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது.
இது பற்றி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பாதாள சாக்கடை கழிவுநீர் பம்பிங் நிலையத்தில், கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டால் மேன்ேஹால் வழியாக வெளியேறாமல் நீரை உறிஞ்சும் மோட்டார் தற்போது 6 மட்டுமே உள்ளது. மேலும் 6 மோட்டார் இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளது. இந்த மோட்டார் வந்தவுடன் பாதாள சாக்கடையில் அடைப்பு மூலம் கழிவுநீர் வெளியேறும் பிரச்னைகள் இருக்காது. தற்போது, நகராட்சி மூலம் விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை அடைப்பு சீரமைப்பு பணிகள் துரிதமாக நடக்கிறது' என்றனர்.