/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எதற்கு வீண் பொல்லாப்பு... எல்லாம் தேர்தல் வரைதான்
/
எதற்கு வீண் பொல்லாப்பு... எல்லாம் தேர்தல் வரைதான்
ADDED : ஏப் 09, 2024 05:24 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் கிராமப்புறங்களில் கட்சி பாகுபாடின்றி ஒரே வீட்டில், சுவர்களில் பல கட்சி சின்னங்கள் வரைவதை வீட்டின் உரிமையாளர்கள் கண்டுகொள்வதில்லை.
கடந்த தேர்தல்களில் கிராமப் புறங்களில் கட்சி சின்னங்கள் வரைய வேண்டும் என்றால் அந்த வீட்டின் உரிமையாளர் எந்த கட்சியே அந்த சின்னம்தான் வரைய வேண்டும். மீறி வேறு சின்னம் வரைய அனுமதிக்க மாட்டார்கள். அப்படியே வரைந்தால் மோதல்கள் ஏற்படும்.
இவை அன்று மட்டும் முடிவதில்லை. தேர்தல் முன்விரோதம் என பல மாதங்கள் ஆனாலும் ஆண்டுகள் ஆனாலும் மோதல்கள் தொடரும்.
ஆனால், இந்த தேர்தலில் கட்சி சின்னம் வரைவதில் எந்த மோதல்களும் ஏற்பட வாய்ப்பில்லை. காரணம், ஒரே வீட்டின் சுவற்றில் எதிரெதிர் கட்சியின் சின்னங்களை வரைய அனுமதிக்கின்றனர். வாக்கூர் கிராமத்தில் ஒரே வீட்டில் மூன்று சின்னங்களும் எழுத அனுமதிக்கப்பட்டு வரைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளரிடம் கேட்டபோது, 'சுவர் விளம்பரத்தை எழுத தடுத்தால் அது பகையாகி வளர்ந்து கொண்டே வருகிறது. தேர்தல் முடிந்த பிறகும் கூட ஏதாவது ஒரு சாக்கு வைத்து சண்டைக்கு வந்து காவல் நிலையம் வரை செல்லும் நிலை வருகிறது.
காவல் நிலையம் சென்றாலும் கட்சிகாரர்களின் செல்வாக்கால் எங்கள் தரப்பு நியாயத்தை கேட்பதில்லை. இந்த சுவர் விளம்பரம் எல்லாம் தேர்தல் வரை தான் இந்த கூத்து. தடுத்து கேட்டால் வீண் பொல்லாப்புதான் வளரும். அதனால் அமைதியாக இருந்துவிடுவோம் என இருக்கின்றோம்.
மேலும் தேர்தல் சமயத்தில் இரவு நேரத்தில் பணம் வினியோகம் செய்யும் போது சின்னத்தை அடையாளம் பார்த்து தருகின்றனர். இது போன்று கட்சி பாகுபாடின்றி வரைந்திருந்தால் சந்தோஷம் தானே' என்றார்.

