/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி அருகே 1,200 ஆண்டு பழைய பல்லவர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு
/
செஞ்சி அருகே 1,200 ஆண்டு பழைய பல்லவர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு
செஞ்சி அருகே 1,200 ஆண்டு பழைய பல்லவர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு
செஞ்சி அருகே 1,200 ஆண்டு பழைய பல்லவர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு
ADDED : ஆக 11, 2025 02:30 AM

விழுப்புரம்,:செஞ்சி அருகே 1,200 ஆண்டு பழமை வாய்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் செஞ்சி அருகே, விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் குழுவினர் கள ஆய்வு செய்த போது, பல்லவர் கால கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டன.
ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:
திண்டிவனம், மொளசூர் ஓடை பகுதியில் கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது. 5 அடி உயரமுள்ள பலகை கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. நீண்ட தலையலங்காரம், அணிகலன்களுடன், எருமை தலையின் மீது நின்ற நிலையில், கொற்றவை அருள்பாலிக்கும் வகையில் உள்ளது. அவரது, ஏழு கரங்களில், ஆயுதங்கள் உள்ளன.
சிற்பத்தின் மேல், வலது புறத்தில் மானும், இடது புறத்தில் சிம்மமும் அமைக்கப்பட்டுள்ளன. மான், சிங்கம் ஆகியவை கொற்றவையின் வாகனங்களாகும். சிற்பத்தின் வலது கீழ் பகுதியில், தன் தலையை தானே அறுத்து பலி கொடுக்கும் வீரன் அமர்ந்துள்ளான்.
இடது பக்கத்தில், வழிபாடு செய்யும் அடியவர் அமர்ந்துள்ளார். பல்லவர் கலைக்கு சிறந்த உதாரணமாக திகழும் இந்த சிற்பத்தின் காலம் கி.பி., 8ம் நுாற்றாண்டை சேர்ந்ததாகும்.
ஆலம்பூண்டி இதேபோன்று, செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஆலகால ஈஸ்வரர் கோவில் வளாகத்தில், மூத்ததேவி சிற்பம் வழிபாட்டில் உள்ளது. 3 அடி உயர பலகை கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
நல்ல உடல்வாகும், தலையலங்காரம், காதணிகள், கழுத்தணிகளுடன் கால்களை அகட்டி அமர்ந்த நிலையில் மூத்ததேவி உள்ளார். வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் சிறிய செல்வ குடத்தின் மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன.
மூத்ததேவியின் இரு பக்கங்களிலும், மகன் மாந்தன், மகள் மாந்தி அமர்ந்துள்ளனர். சிற்பத்தின் மேல் பகுதியில் காக்கை கொடியும், ஆயுதமான துடைப்பமும் உள்ளன.
இச்சிற்பம், பல்லவர் கால இறுதியில் கி.பி., 9ம் நுாற்றாண்டில் வடிக்கப்பட்டிருக்கலாம். உள்ளூர் மக்கள் இதை காளி, மானசாதேவி என வழிபடுகின்றனர்.
கொற்றவை, மூத்ததேவி வழிபாடு, 1,000 ஆண்டுகளை கடந்தும் தொடர்வதற்கு மொளசூர், ஆலம்பூண்டி சிற்பங்கள் உதாரணமாக திகழ்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.