/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மர்ம விலங்கு கடித்து 41 ஆடுகள் உயிரிழப்பு
/
மர்ம விலங்கு கடித்து 41 ஆடுகள் உயிரிழப்பு
ADDED : ஆக 11, 2025 02:27 AM

செஞ்சி:செஞ்சி அருகே மர்ம விலங்கு கடித்து, 41 ஆடுகள் பலியானதால், கால்நடை வளர்ப்போர் பீதியில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மற்றும் மேல்மலை யனுார் பகுதியில் உள்ள கோட்டப்பூண்டி, எதப்பட்டு, நல்லாண் பிள்ளை பெற்றாள், பாக்கம், கொங்கரப்பட்டு, அவியூர், வீரணாமூர் ஆகிய கிராமங்களிலும், கண்டாச்சிபுரம், திண்டிவனம் தாலுகாவில் சில கிராமங்களிலும் மர்ம விலங்கு, ஆடு, கன்று குட்டி மற்றும் காடுகளில் மான்களை வேட்டையாடி வருகிற து.
இடையில் சில மாதங்கள் தாக்குதல் இல்லாமல் இருந்த நிலையில், மூன்று மாதமாக செஞ்சி அடுத்த தொண்டியாற்று கரையோரம் உள்ள கொங்கரப்பட்டு, ரெட்டணை, ஆசூர், வீரணாமூர், அவியூர் உள்ளிட்ட கிராமங்களில் மர்ம விலங்கு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று முன்தினம், ஆசூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், 35, கொங்கரப்பட்டு கிராமத்தில், கம்பி வேலிக்குள் பட்டியில் அடைத்து வைத்திருந்த, 95 ஆடுகளில், 38 செம்மறி ஆடுகளையும், மூன்று வெள்ளாடுகளையும் மர்ம விலங்கு கடித்து கொன்றது. 15 ஆடுகளை காயப்படுத்தி இருந்தது.
மாவட்ட உதவி வன பாதுகாவலர் தர்மலிங்கம் தலைமையில், வனக்காப்பாளர்கள் விசாரணை நடத்தினர். மர்ம விலங்கின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். இரண்டு விலங்கின் கால் தடம் இருப்பதாலும், ஒன்று சிறிய கால் தடமாக இருப்பதாலும், மர்ம விலங்கு குட்டியுடன் உலா வருவதாக கருதுகின்றனர்.
கால் தடங்கள், கழுதை புலி கால் தடத்துடன் ஒத்துப்போகிறது. கிராம மக்கள் சிலர், கழுதை புலியை பார்த்துள்ளனர்.
ஆனாலும், கேமராவில் விலங்கு சிக்காததால், மர்ம விலங்கு என, வனத்துறையினர் குறிப்பிடுகின்றனர்.