/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்கூர் மதகில் அமைத்ததால் 200 ஏக்கர் நீரில் மூழ்கி பயிர்கள் சேதம்
/
வாக்கூர் மதகில் அமைத்ததால் 200 ஏக்கர் நீரில் மூழ்கி பயிர்கள் சேதம்
வாக்கூர் மதகில் அமைத்ததால் 200 ஏக்கர் நீரில் மூழ்கி பயிர்கள் சேதம்
வாக்கூர் மதகில் அமைத்ததால் 200 ஏக்கர் நீரில் மூழ்கி பயிர்கள் சேதம்
ADDED : நவ 02, 2025 03:49 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் கிராமத்தில் ஏரி மதகின் மீது நீர் பிடிப்பிற்காக மண் மேடு அமைத்ததால் 200 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.
விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் கிராமத்தில் 118 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியின் மூலம் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஏரியில் ஆண்டுதோறும் போதிய நீர் பிடிப்பு இல்லாததால் ஒருபோக நெல் சாகுபடி மட்டுமே செய்ய முடிகிறது.
இதனால், கிராம விவசாயிகள் தற்போது நீர் பிடிப்பதற்காக சில தினங்களுக்கு முன் பெய்த மழை நீரை சேமிக்கும் வகையில் ஏரி மதகின் மீது ஜே.சி.பி., மூலம் மண்மேடு அமைத்து ஏரியில் அதிகமாக நீர் தேங்க வசதி செய்தனர்.
வாக்கூர் ஏரியின் பூமி மட்டமும் விளை நிலங்களில் பூமி மட்டமும் ஒரே சீராக இருப்பதால் அதிக அளவு மழை பெய்யும் போது நீர்மட்டம் உயர்ந்து அருகில் உள்ள பகுதி மூழ்கி விடுகிறது.
இதனால் ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள சிறுவள்ளிக்குப்பம், தொரவி கிராமங்களில் ஏரி பாசன வசதி பெறும் நிலங்கள் 200 ஏக்கருக்கு மேல் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
வாக்கூர் ஏரி மதகின் மீது உள்ள மண் மேட்டை அகற்றி பயிர்களில் தண்ணீர் மூழ்குவதை தவிர்க்க கலெக்டரிடம் 2 கிராம மக்களும் மனு அளித்தனர்.
அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாக்கூரில் உள்ள ஏரி ஷட்டரை திறக்க வந்த போது கிராமத்தைச் சேர்ந்த சிலர் தடுத்ததால் அதிகாரிகள் ஷட்டரை திறக்காமல் சென்றனர்.
இந்த ஏரியில் இது போன்று மதகின் மீது மண்மேடு அமைத்து நீர் பிடிமானம் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2010ம் ஆண்டு இரு கிராம மக்களும் சேர்ந்து வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் வாக்கூரில் நீர் சேமிப்பிற்காக இது போன்று தடுப்பு ஏற்படுத்துவது இரு கிராம மக்கள் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.
மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சீரமைக்காவிட்டால் 2 கிராம மக்களும் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளனர்.
எனவே கலெக்டர், தொகுதி எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் துரித நடவடிக்கை எடுத்து 3 கிராம மக்களையும் அழைத்து பேசி சுமூக முடிவு காண வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

