ADDED : மே 20, 2025 11:39 PM
வானுார் : பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், நண்பரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வானுார் சேமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னையா மகன் விஜயமூர்த்தி, 41; ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் சூர்யா, 28; நண்பர்கள். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சூர்யாவிடம், விஜயமூர்த்தி 5000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அந்த பணத்தை திருப்பித் தராமல் விஜயமூர்த்தி காலம் தாழ்த்தி வந்தார்.
நேற்று முன்தினம் சூர்யா, ரங்கநாதபுரத்தில் இருந்த விஜயமூர்த்தியிடம் கடனை திருப்பிக் கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சூர்யா, அவரது நண்பர்களான குன்னத்தைச் சேர்ந்த பன்னீர் மகன் சுரேஷ், 30; கண்ணப்பன் மகன் அப்பு, 26; ஆகியோருடன் சேர்ந்து விஜயமூர்த்தியை தாக்கினார்.
காயமடைந்த விஜயமூர்த்தி, வானுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சூர்யா, சுரேஷ், அப்பு ஆகிய 3 பேர் மீதும் வானுார் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.