/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கார் கவிழ்ந்து விபத்து சிறுவன் உட்பட 5 பேர் பலி
/
கார் கவிழ்ந்து விபத்து சிறுவன் உட்பட 5 பேர் பலி
ADDED : ஜூலை 21, 2025 01:45 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்தனர்; ஐவர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், டி.தேவனுார் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன், 44; விழுப்புரம் ஆயுதப்படை பிரிவு போலீஸ். இவருடன், அதே கிராமத்தை சேர்ந்த 9 பேர் நேற்று காலை, 9:30 மணிக்கு, 'மகேந்திரா சைலோ' காரில் திருவண்ணாமலை புறப்பட்டனர். காரை மாதவன் ஓட்டினார்.
திருக்கோவிலுார் - திருவண்ணாமலை சாலையில், காட்டுகோவில் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், மீடியன் மீது உரசி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், டி.தேவனுார் சங்கீதா, 30, சாந்தி, 65; சுபா, 55, ராகவேந்திரன், 13, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரை ஓட்டிய மாதவன், அவரது மனைவி மேனகா, 35, தனலட்சுமி, 70, கோஷிகா, 2, பூமாரியை சேர்ந்த சரிதா, 23, அவரது தம்பி மோகன் கிருஷ்ணன், 13, ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு, மூதாட்டி தனலட்சுமி இறந்தார். விபத்து குறித்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.