/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் ஒரே ஆண்டில் 5,500 கிலோ குட்கா பறிமுதல்!: கடும் நடவடிக்கை இல்லாததால் தொடரும் விற்பனை
/
மாவட்டத்தில் ஒரே ஆண்டில் 5,500 கிலோ குட்கா பறிமுதல்!: கடும் நடவடிக்கை இல்லாததால் தொடரும் விற்பனை
மாவட்டத்தில் ஒரே ஆண்டில் 5,500 கிலோ குட்கா பறிமுதல்!: கடும் நடவடிக்கை இல்லாததால் தொடரும் விற்பனை
மாவட்டத்தில் ஒரே ஆண்டில் 5,500 கிலோ குட்கா பறிமுதல்!: கடும் நடவடிக்கை இல்லாததால் தொடரும் விற்பனை
UPDATED : டிச 30, 2025 02:12 PM
ADDED : டிச 30, 2025 04:14 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், ஒரே ஆண்டில் 5,500 கிலோ குட்கா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து, 230 பேரை கைது செய்துள்ளனர். கடும் நடவடிக்கை இல்லாததால் விற்பனை தொடர்ந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் குட்கா, போதை பொருள் விற்பனை அதிகரித்து, குற்ற சம்பவங்கள் நடப்பதாக கடும் விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது. இதனால், போலீசாரின் அதிரடி நடவடிக்கையால், இந்தாண்டு குட்காவை கட்டுப்படுத்தும் விதமாக தொடர்ந்து வாகன சோதனைகள், திடீர் ஆய்வுகள் மூலம் குட்கா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இரு தினங்களுக்கு முன் அரகண்டநல்லுார் போலீசார் மணம்பூண்டி கூட்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவிலிருந்து பைக்கில் குட்கா மூட்டைகள் கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 220 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சரவணப்பாக்கத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 60 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
இதே போல், விழுப்புரம், திருவெண்ணெய்நல்லுார், திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி, கண்டாச்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சோதனை நடத்தி குட்கா விற்பனை மற்றும் கடத்தல் நபர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்தாண்டில் மட்டும், விழுப்புரம் மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் தொடர்பாக தொடர் சோதனை மேற்கொண்டு, 230 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்குகளில் தொடர்புடைய 325 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5,500 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர் நடவடிக்கையில் ஈடுபட்ட 4 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் தொடர்புடைய 20 நான்கு சக்கர வாகனங்கள், 30 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ என 51 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு 4,822 கிலோ குட்காவும், 2023ம் ஆண்டு 3,043 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளாக தொடர் சோதனை நடத்தி, குட்கா மற்றும் போதை பொருள் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆனாலும், பெட்டிக்கடைகளில் மறைமுகமாக குட்கா விற்பதும், சென்னை, திருவண்ணாமலை, பெங்களூரு பகுதிகளிலிருந்து மொத்தமாக குட்கா, போதை பொருள்கள் கடத்தி வரப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் விற்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது, போலீசாரின் தினசரி கைது நடவடிக்கைகளில், குட்கா விற்பனை கைது அதிகம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
பெட்டிக்கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீசார், அவர்களுக்கு விநியோகம் செய்து வரும் நிரந்தர மொத்த விற்பனையாளர்கள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்காததால், விற்பனை தடையின்றி நடந்து வருகிறது. அவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, குட்கா விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

