sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தி வரும் நல்லாசிரியர்

/

மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தி வரும் நல்லாசிரியர்

மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தி வரும் நல்லாசிரியர்

மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தி வரும் நல்லாசிரியர்


ADDED : செப் 21, 2025 04:52 AM

Google News

ADDED : செப் 21, 2025 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி:விழுப்புரம் மாவட்டத்தில், 28 ஆண்டுகளாக கல்வி சேவை புரிந்து, மாணவர்களை வாழ்வில் நல்ல நிலையில் முன்னேற்றி, தற்போது நல்லாசிரியர் விருது பெற்று, அனைவரின் பாராட்டுகளை பெற்று வருகிறார் தலைமை ஆசிரியர் செல்வி விஜயலதா.

இவர் விக்கிரவாண்டி ஒன்றியம் செ.பூதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் அதே பள்ளியில் கடந்த, 1997ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அங்கு, 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் நேமூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 14 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

மீண்டும் கடந்த, 2014 ம் ஆண்டு தலைமையாசிரியராக, செ.பூதுார் பள்ளியில் சேர்ந்து, தற்போது வரை பணியாற்றி வருகிறார்.

இவர் இன்று வரை, 28 ஆண்டுகளாக ஆசிரியர் சேவையை தொடர்ந்து வருகிறார். செல்வி விஜயலதா பணியாற்றிய இரு பள்ளிகளிலும், துவக்க காலத்தில் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.

இவருடைய முயற்சியால் மாணவர்களின் எண்ணிக்கை அந்த பள்ளிகளில் அதிகரித்தது. இதனால், 2 ஆசிரியர் பள்ளி, 3 ஆசிரியர் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

செ.பூதுார் மற்றும் நேமூர் ஆகிய இரண்டு பள்ளி கட்டடங்களும் பழுதடைந்த நிலையில், இவரது முயற்சியால், கான்கிரீட் கட்டடங்களாக கட்டப்பட்டன.

குறிப்பாக, செ.பூதுார் பள்ளியில் மரங்கள், மூலிகை செடிகள், காய் கறித்தோட்டம், பூச்செடிகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சுவரில் கற்றலில் ஆர்வத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளியில் நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வட்டார கல்வி அலுவலரால் பரிந்துரை செய்யப்பட்டு, இந்தாண்டிற்கான, மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இதையொட்டி கடந்த 5ம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி , தலைமை ஆசிரியர் செல்வி விஜயலதாவை பாராட்டி விருது மற்றும் சான்றுகளை வழங்கி கவுரவித்தார்.

இதையடுத்து, அவருக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி, அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், சி.இ.ஓ., அறிவழகன், டி.இ.ஓ., சேகர், வட்டார கல்வி அலுவலர்கள் புஷ்பராணி, சேகர், வேலியேந்தல் எம்.டி., தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் வேதநாயகம், தி.மு.க மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கில்பர்ட் ராஜ் மற்றும் பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து அவர் கூறியதாவது:

ஆசிரியர் பணி எனது சிறு வயது முதல் கனவு கண்டு அடைந்த பணியாகும். நான் பணியை பள்ளி குழந்தைகளுடன் முழு அர்ப்பணிப்புடன் செய்து வருகிறேன்.

கடந்த 28 ஆண்டுகளாக என்னிடம் படித்த பலர் இன்று அரசு அலுவலங்களில் பணி பெற்றும் , தனியார் துறை நிறுவனங்களில் பெரிய பொறுப்புகளிலும் உள்ளனர்.

அவர்கள் என்னிடம் வந்து தன்னுடைய பணியை பற்றி கூறும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

காலம் தவறாமல் பள்ளி நேரத்திற்கு முன்பாக வந்து விடுவேன். மாணவர்களை கல்விச்சுற்றுலா அழைத்து சென்றுள்ளேன். கடந்த, 2014ல்தலைமை ஆசிரியராக பொறுப்பு ஏற்றதிலிருந்து, எந்த வித விடுப்பும் எடுக்காமல் பணியாற்றி வருகிறேன்.

எனது மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கணித அடிப்படைத் திறன்களை பெற்றுள்ளனர். வாய்ப்பாடு 1 முதல்

20 வரையிலும், 20 முதல் 1 வரையிலும் நேராகவும், தலைகீழாகவும் கூறுவர்.

நான் பணி புரிந்த பள்ளிகளின் கிராம மக்கள் பாராட்டி என்னை ஊக்கப்படுத்தி, மாவட்ட கல்வி அலுவலரிடம் என் பணி சிறப்பை தெரிவித்துள்ளனர்.

விருது பெற்ற பிறகு, கிராம மக்கள் , மாணவர்களின் பெற்றோர் தினமும் பள்ளிக்கு வந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு செல்வி விஜயலதா கூறினார்.






      Dinamalar
      Follow us