/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிகாரிகள் இன்றி தள்ளாடும் நகராட்சி
/
அதிகாரிகள் இன்றி தள்ளாடும் நகராட்சி
ADDED : செப் 19, 2024 11:12 PM
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில் கமிஷனர், பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியில் இல்லாததால் நிர்வாகம் தள்ளாடி வருகிறது.
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்த மேலாளர், கணக்காளர் (அக்கவுண்ட்டன்ட்) ஆகியோர், கடந்தாண்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து ஓராண்டாக இந்த பதவிகளுக்கு புதிதாக யாரும் நியமனம் செய்யப்படவில்லை.
நகராட்சி பொறியாளராக பணிபுரிந்த மாலதி என்பவரும் கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றார். கடந்த 5 மாதங்களாக, அந்தப் பணியிடமும் காலியாகவே உள்ளது.
இதற்கிடையே கடந்த மாதம், விழுப்புரம் நகராட்சி கமிஷனர் ரமேஷ், மறைமலை நகர் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி கமிஷனர் பொறுப்பை, நகராட்சி சுகாதார நல அலுவலர் பிரியாவிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார். இவருக்கு பதிலாக, காரைக்குடி நகராட்சி கமிஷனராக பணிபுரிந்த வீரமுத்துக்குமார் நியமனம் செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 29ம் தேதி காலை, விழுப்புரம் நகராட்சி கமிஷனராக வீரமுத்துக்குமார் பதவியேற்றார். தொடர்ந்து நடந்த நகர மன்ற கூட்டத்தில் பங்கேற்றார்.
அதன் பிறகு ஒரு மாதம் விடுமுறையில் சென்று விட்டார்.
இதனையடுத்து, கமிஷனர் பொறுப்பை மீண்டும், நகராட்சி சுகாதார நல அலுவலர் பிரியா கவனித்து வருகிறார்.
தற்போது, விழுப்புரம் நகராட்சியில் கமிஷனர், பொறியாளர், மேலாளர், கணக்காளர் ஆகிய முக்கிய அதிகாரிகள் இல்லாத நிலை உள்ளது.
இதனால், முக்கிய பிரச்னைகளை கையாள்வதில், நகராட்சி நிர்வாகம் தள்ளாடி வருகிறது.