/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழைநீர் வடிகால் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு... எப்போது கோலியனுாரான் வாய்க்கால் சீரமைக்கப்படுமா?
/
மழைநீர் வடிகால் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு... எப்போது கோலியனுாரான் வாய்க்கால் சீரமைக்கப்படுமா?
மழைநீர் வடிகால் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு... எப்போது கோலியனுாரான் வாய்க்கால் சீரமைக்கப்படுமா?
மழைநீர் வடிகால் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு... எப்போது கோலியனுாரான் வாய்க்கால் சீரமைக்கப்படுமா?
ADDED : அக் 21, 2024 04:04 AM

விழுப்புரம் விழுப்புரத்தில் மழைநீர், கழிவுநீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, முடங்கியுள்ள கோலியனுாரான் வாய்க்காலை சீரமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் நகரில் ஆண்டு தோறும் மழைநீர் மற்றும் கழிவுநீரை வெளியேற்றுவதில் பெரும் நெருக்கடி நிலை தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக, விழுப்புரம் அடுத்த எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் தொடங்கி கோலியனுாரான் வாய்க்கால் வரை மொத்தமுள்ள 16 கி.மீ தொலைவில், விழுப்புரம் நகரின் வழியாக 5 கி.மீ., தொலைவிற்கு கடந்து சென்று கோலியனுாரில் முடிகிறது.
எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு அருகே தொடங்கும் இந்த வாய்க்கால், வழுதரெட்டி வழியாக, விழுப்புரம் நகரில் கலெக்டர் பெருந்திட்ட வளாக பின் பகுதியில் தொடங்கி, பிறகு நேருஜி சாலையில் குறுக்கிட்டு, பூந்தொட்டம், மருதுார் வழியாக ரயில்வே பாலத்தைக் கடந்து, ரயில்வே காலனி, பி.என்.தோப்பு, இ.பி.காலனி, மகாராஜபுரம் வழியாக, சாலை அகரம், கோலியனுாரைச் சென்றடைகிறது.
இந்த கோலியனுாரான் வாய்க்கால், கடந்த காலங்களில் 9 ஏரிகளுக்கு நீர்வரத்து வாய்க்காலாக இருந்துள்ளது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், பராமரிப்பின்றி பல இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக வாய்க்கால் துண்டிக்கப்பட்டது.
அதன் பிறகு விழுப்புரம் நகரின் மழைநீர், கழிவுநீர் வெளியேறும் முக்கிய வாய்க்காலாக மாறிப்போனது. ஆண்டு தோறும் மழைக்காலங்களில் மட்டும், நகர பகுதியில் அடைப்பை துார் வாருவதும், பிறகு அடைத்துக்கொண்டு வழிந்தோடுவதும் தொடர்கதையாகவே உள்ளது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 2017-18ம் ஆண்டு ரயில்வே பாலத்தின் கீழ் உடைப்பு ஏற்பட்டதால், அதனை சீரமைத்து, 2 கோடி ரூபாயில் வடிகால் பாலம் அமைத்தனர். தொடர்ந்து, 8 கோடி ரூபாய் மதிப்பில், கோலியனுாரான் வாய்க்காலை நகர பகுதியில் மட்டும் சிமென்ட் வாய்க்காலாக கட்டி சீரமைத்தனர். மகாராஜபுரம் வரை இந்த சிமென்ட் வாய்க்காலை அமைத்தனர்.
அதன் பிறகு, கோலியனுாரான் வாய்க்கால் பராமரிக்காமல் விட்டதால், சிமென்ட் வாய்க்காலாக உள்ள நகர பகுதியிலேயே பிளாஸ்டிக் கழிவுகள், ஆக்கிரமிப்புகள் காரணமாக அடைப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், மகாராஜபுரத்திலிருந்து, வாய்க்கால் ஆக்கிரமிப்பால் மிகவும் குறுகி தண்ணீர் செல்ல முடியாமல் வழிகிறது. இதனையடுத்து, சாலை அகரம் ஏரிக்குச் செல்லும் பாதையையும் அடைத்துவிட்டதால், கோலியனுாரான் வாய்க்கால் பாதியில் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
மழைக்காலம் தோறும் நகராட்சி தரப்பில் துார்வாருவதோடு நிறுத்திக் கொள்கின்றனர். வாய்க்காலை பொதுப்பணித் துறையினர்தான் சீரமைக்க வேண்டும் என கூறுகின்றனர்.
விழுப்புரம் நகரில் மழை நீர், கழிவுநீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, கோலியனூரான் வாய்க்கால் முழுமையாக சீரமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

