/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நோய் பரவும் இடமானது அக்னி குளம் தேவை! மாசிமக விழாவிற்கு முன் சீரமைக்கப்படுமா?
/
நோய் பரவும் இடமானது அக்னி குளம் தேவை! மாசிமக விழாவிற்கு முன் சீரமைக்கப்படுமா?
நோய் பரவும் இடமானது அக்னி குளம் தேவை! மாசிமக விழாவிற்கு முன் சீரமைக்கப்படுமா?
நோய் பரவும் இடமானது அக்னி குளம் தேவை! மாசிமக விழாவிற்கு முன் சீரமைக்கப்படுமா?
ADDED : மார் 04, 2024 12:11 AM

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீராடும் குளமான அக்னி குளம் நோய் பரப்பும் குட்டையாகவும், விபத்து ஏற்படுத்தும் ஆபத்தான குளமாகவும் மாறியுள்ளது. மாசிமகத் திருவிழா துவங்கும் முன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிக பக்தர்கள் கூடும் விழாவாக மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசிமக தேரோட்டம் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் 13 நாட்கள் நடக்கும் மாசிமக பெருவிழா, இந்த ஆண்டு வரும் 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 9ம் தேதி மயானக்கொள்ளையும், 12ம் தேதி தீமிதி விழாவும், 14ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெற உள்ளது.
12ம் தேதி நடைபெறும் தீமிதி விழாவின் போது விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூருவில் இருந்தும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காப்பு கட்டி விரதமிருந்து தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்துவர்.
இந்த பெண்கள் தீ மிதிப்பதற்கு முன்பாக இங்குள்ள அகினி குளத்தில் நீராடிய பின்னரே தீமிதிக்கின்றனர்.
அத்துடன் தீயசக்தியால் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பும் பக்தர்கள், இங்குள்ள அக்னி குளத்தில் நீராடினால் விமோசனம் கிடைக்கும் என நம்புகின்றனர்.
பல்வேறு பிரார்த்தனைகளின் பரிகாரத்திற்காக அம்மனை தரிசிக்கும் முன் அக்னி குளத்தில் நீராடுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
தேர் திருவிழாவிற்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குளத்தில் நீராடுவதுடன், குளித்து முடித்ததும் உடையை குளத்தில் மூழ்க விட்டு, புதிய உடை அணிந்து கோவிலுக்குள் செல்கின்றனர்.
இது போல் பக்தர்கள் குளத்திற்குள் விட்டு சென்ற துணிகள் குளம் முழுவதும் ஆயிரக்கணக்கில் தண்ணீருக்குள் குவிந்து கிடக்கிறது. இதனால் குளத்தின் தண்ணீர் கெட்டு மாசடைந்துள்ளது.
தண்ணீர் மசடைந்திருப்பதால் இதில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அத்துடன் குளத்தில் குளிக்கும் போது பழைய துணிகள் கால்களில் சிக்கி நீரில் மூழ்கி அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் பலர் குளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்.
எனவே, பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாசிமக திருவிழா துவங்கும் முன் அக்னி குளத்தில் உள்ள துணிகளை அப்புறப்படுத்தவும், துாய்மைப்படுத்தி சீரமைக்கவும், வெளியிடத்தில் இருந்து புதிதாக தண்ணீர் கொண்டு வந்து குளத்தை நிரப்பவும் மாவட்ட நிர்வாகமும், ஹிந்து சமய அறநிலையத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

