ADDED : செப் 05, 2025 08:14 AM
கா க்கும் கடவுளான திருமால் அசுரர்களான மது, கைடபர் என்ற இருவரையும் வதைத்த பின்னர் மேலும் பல அசுரர்களோடு, போரிட்டு அவர்களையெல்லாம் கொன்றார். இதனால் அவர் களைப்புற்றார். சோர்வுடன் பத்மாசனத்தில் அமர்ந்தவாரே நாண் பூட்டிய தனது வில்லை பூமியில் ஊன்றி, கழுத்தை அதன் மீது சாய்ந்து உறக்கத்தில் ஆழ்ந்தார். திருமால் திடீரென துாக்கம் கொண்டபோது உலகமே செயலிழந்தது.
தேவர்கள் கதி கலங்கி பிரம்மாவும், சிவனும் சேர்ந்து திருமாலின் துாக்கத்தை எப்படியேனும் கலைத்து அவரை துயிலெழச் செய்ய வேண்டும் என வேண்டினர். பிரம்மனால் படைக்கப்பட்ட பூச்சி இனங்களில் ஒன்றான கரையான் பூச்சி அந்த ஊன்றப்பட்ட வில்லின் நாண் நுனியினை கடித்து அரித்தால், நாண் அறுந்து அந்த ஓசையில் இறைவன் துயிலெழுந்து விடுவார் என எதிர்பார்த்தனர்.
பிரம்மாவின் கட்டளைப்படி கரையான்கள் ஒன்று திரண்டு வில்லின் நுனியை அரிக்கத் துவங்கின. பேரொலியேடு நாண் அறுந்தது. அதே வேகத்தில் வில் திருமாலின் தலையை வெட்டி துண்டித்து விட்டது. இதை பார்த்து அனைவரும் திடுக்கிட்டனர்.
ஒருமுறை மகாவிஷ்ணு, லட்சுமியின் முகத்தை பார்த்து கேலி செய்ய, தேவியோ கோபம் அடைத்து தன்னை பரிகாசம் செய்த இறைவனின் தலை ஒரு சந்தர்ப்பத்தில் அறுந்து விழ கடவது என்று சாபமிட்டுள்ளார். இந்த அறுந்து கிட சாபத்தின்படி தான் தலை துண்டிக்கப்பட்டதாம்.
அதே நேரத்தில் சரஸ்வதி நதிக்கரையில் குதிரை தலையுடன் கூடிய ஹயக்ரீவன் என்ற அசுரன், தேவி பராசக்தியை நோக்கி தவம் புரிந்து வந்தான். தேவி அவனுக்கு காட்சி தந்தபோது, குதிரை முகம் படைத்த ஒருவனால் மட்டுமே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தை கேட்டு பெற்றான். பிறகு அனைத்து தேவர்களையும் துன்புறுத்த துவங்கினான்.
இதற்கிடையில் பிரம்மாவும் இதர தேவர்களும் திருமாலின் உடலில் வேறு ஒரு பொருத்தமான தலையை கண்டுபிடித்து பொருத்துமாறு தேவ சிற்பியான துவஷ்டாவை வேண்டினர்.
துவஷ்டாவும் ஒரு அழகிய ஆண் குதிரையின் தலையை வெட்டி கொண்டு வந்து திருமாலின் கழுத்தில் பொருத்தினார். இதன் மூலம் குதிரை தலையுடன் கூடிய ஸ்ரீஹயக்ரீவர் அவதாரம் எடுத்தார்.
ஹயக்ரீவர் இந்திரனையும், தேவர்களையும் துன்புறுத்தி வந்த ஹயக்ரீவாசுரனை வதம் செய்தார்.