/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மரக்காணத்தில் விதை ஆய்வுத் துறையினர் அதிரடி: 4 கடைகளில் தரமற்ற விதைகள் பறிமுதல்
/
மரக்காணத்தில் விதை ஆய்வுத் துறையினர் அதிரடி: 4 கடைகளில் தரமற்ற விதைகள் பறிமுதல்
மரக்காணத்தில் விதை ஆய்வுத் துறையினர் அதிரடி: 4 கடைகளில் தரமற்ற விதைகள் பறிமுதல்
மரக்காணத்தில் விதை ஆய்வுத் துறையினர் அதிரடி: 4 கடைகளில் தரமற்ற விதைகள் பறிமுதல்
ADDED : மார் 14, 2024 11:27 PM

விழுப்புரம்: மரக்காணத்தில் திடீர் ஆய்வு செய்த விதை ஆய்வுத் துறையினர், 4 விற்பனையகங்களில் இருந்த தரமற்ற தர்பூசணி விதைகளை பறிமுதல் செய்து, விதைகள் விற்பனைக்கு தடை விதித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், சமீப காலமாக நெல், மக்காச்சோளம், தர்பூசணி, சாம்பல் பூசணி, கிர்ணி பழம் முதலான பயிர்களுக்கு, தனியார் உற்பத்தி செய்த விதைகள், அதிகளவில் விற்பனை செய்யப்படுவதும், அதுபோன்ற விதைகள் தரமானதாக இல்லை என்ற புகார் எழுந்தது.
இது குறித்து, விதை ஆய்வுத் துறையினர் அந்தந்த தாலுகாக்களில் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, மரக்காணம் தாலுகாவில், முருக்கேரி பகுதியில் உள்ள விதை விற்பனை நிலையங்களில், விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சரவணன் தலைமையில், விதை ஆய்வாளர்கள் தமிழ்வேல், செந்தில்குமார், ஜோதிமணி, நடராஜன் ஆகியோர் கொண்ட குழு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, விதை சட்டத்தை மீறியதாக, 4 கடைகளில் இருந்த 4.51 லட்சம் ரூபாய் மதிப்பிலான தரமற்ற 50 கிலோ அளவிலான தர்பூசணி விதைகளை பறிமுதல் செய்தனர். மேலும், 4 கடைகளுக்கும், மறு உத்தரவு வரும் வரை விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் சரவணன் கூறுகையில், அனைத்து விதை விற்பனையாளர்களும், தனியார் ரக விதைகளை கொள்முதல் செய்தால், அதற்கான பதிவுச்சான்று நகல் பெற வேண்டும்.
பதிவுச்சான்று நகல் இல்லாத விதைகளையோ அல்லது பதிவுச்சான்று ரத்து செய்யப்பட்ட ரக விதைகளையோ விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொள்முதல் செய்யப்படும் அனைத்து விதைகளுக்கும், கொள்முதல் பட்டியல், விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல், பதிவுச்சான்று முதலியவற்றைப் பெற்று, இருப்பு பதிவேட்டில், இருப்பு வைத்து விநியோகம் செய்யப்பட வேண்டும்.
விதை வாங்கும் விவசாயிகளுக்கு விற்பனைப்பட்டியல் ரசீது, பயிர் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், உற்பத்தியாளர் பெயர் உள்ளிட்ட விவரங்களும் குறிப்பிட்டு கையொப்பம் பெற்று வழங்க வேண்டும். விற்பனை பட்டியல் நகல் பராமரிக்கப்பட வேண்டும்.
இந்த சட்ட விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விதைகளை வாங்கும் விவசாயிகளும், இந்த விபரப்படி பட்டியலைக் கட்டாயம் பெற வேண்டும். பருவத்திற்கேற்ற ரகங்களை தேர்வு செய்து விதைப்பு மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

