/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பு குழு கூட்டம்
/
ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பு குழு கூட்டம்
ADDED : மார் 24, 2025 04:41 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் 2024-25ம் நிதியாண்டில் வன்கொடுமையால் பாதித்த 239 பேருக்கு தீருதவி தொகையாக 2 கோடியே 76 லட்சத்து 45 ஆயிரத்து 750 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
வன்கொடுமையால் பாதித்து இறந்த 28 பேரில், 26 பேரின் வாரிசுதாரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் தலா 5,000 ரூபாய் மற்றும் பஞ்சப்படி சேர்த்து வழங்கப்படுகிறது. மீதமுள்ள 2 பேருக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக பரிசீலனையில் உள்ளது. 13 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 15 பேரின் வாரிசுதாரர்களுக்கு அரசு பணி வழங்குவது தொடர்பாக பரிசீலனையில் உள்ளது. அனைத்து வட்டாரங்களில் தீண்டாமை ஒழிப்பு பற்றி துறை அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தொழில் முனைவோர்களுக்கான கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான விடுதிகளில் சுகாதாரம், உணவு சுகாதாரமான முறையில் வழங்குவதை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து பகுதிகளிலும் விடுபட்டோருக்கு பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், உதவி இயக்குனர் கலா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.