/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பருவ மழையில் இருந்து வேளாண் பயிர்களை காக்க... ஆலோசனை; விவசாயிகளுக்கு வேளாண்துறை முன்னெச்சரிக்கை
/
பருவ மழையில் இருந்து வேளாண் பயிர்களை காக்க... ஆலோசனை; விவசாயிகளுக்கு வேளாண்துறை முன்னெச்சரிக்கை
பருவ மழையில் இருந்து வேளாண் பயிர்களை காக்க... ஆலோசனை; விவசாயிகளுக்கு வேளாண்துறை முன்னெச்சரிக்கை
பருவ மழையில் இருந்து வேளாண் பயிர்களை காக்க... ஆலோசனை; விவசாயிகளுக்கு வேளாண்துறை முன்னெச்சரிக்கை
ADDED : அக் 24, 2024 12:16 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருவதால், பயிர்களை பாதுகாப்பதற்கு விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில், சாகுபடி செய்துள்ள பயிர்கள் மட்டுமின்றி, மரப்பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பாதிக்க வாய்ப்புள்ளதால், பயிர்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், தோட்டக்கலை பயிர்களான காய்கறிகள், மலர்கள், பழங்கள் என 20,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நிலத்தில் காய்ந்த மற்றும் பட்டுப்போன மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வெண்டும்.
மரங்களின் எடையை குறைக்கும் வகையில், கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் ஆழப்பகுதியில் மண் அணைத்து, தண்டு பகுதியில் மண்ணை குவித்து, தேவையான வடிகால் வசதி செய்ய வெண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்காத வகையில் முன்னேற்பாடு செய்ய வேண்டும்.
தென்னை மரங்களில் தேங்காய், இளநீர், ஓலைகள் இருந்தால், காற்றின் வேகத்தால், மரம் சாயவும், முறிந்து விழவும் வாய்ப்புள்ளது. எனவே, இளம் ஓலைகளை தவிர்த்து, மீதமுள்ளவற்றை, வெட்டி அகற்ற வேண்டும். புயல் வருகையை உறுதி செய்த பின், நான்கு நாட்களுக்கு, தென்னந்தோப்புகளுக்கு நீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.
மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை உள்ளிட்ட மரங்களில், பக்கவாட்டு கிளைகள் மற்றும் அதிகப்படியான இலைகளை அகற்ற வேண்டும். இதன் வாயிலாக, மரம் வேரோடு சாய்வதை தடுக்க முடியும்.
இரண்டு நாட்களுக்கு முன், நீர் பாய்ச்சுவதை நிறுத்தினால், வேர்ப்பகுதி இறுகி, மரம் காற்றில் சாயாமல் தடுக்கலாம். உரிய வடிகாள் வசதி செய்திட வேண்டும். சிறிய செடிகள் காற்றினால் பாதிக்கும் வண்ணம் இருப்பதால், தாங்கும் குச்சிகள் மூலம் இறுக்கி கட்ட வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து, தண்டு பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். குறிப்பாக நோய் தடுப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
வாழை, பப்பாளி, முருங்கை பயிர்கள் பாதுகாப்பு: தோப்பைச் சுற்றி வாய்க்கால் எடுத்து, மழைநீர் தேங்காமல் வெளியேற, வழிவகை செய்ய வேண்டும். உரமிடுவதற்கு மரத்தை சுற்றி, பாத்தி கட்டுதல் போன்ற பணிகளை தவிர்க்க வேண்டும். கனமழை மற்றும் காற்று குறைந்த பின், இந்த பணியை மேற்கொள்ள வேண்டும். சவுக்கு மற்றும் யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும்.
வாழைதாரர்களை முறையாக மூடி வைத்தல் வேண்டும். குறிப்பாக 75 சதவீதத்துக்கும் மேல் முதிர்ந்த தார்களை உடனடியாக அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும். காய்கறி, பூக்கள், பந்தல் காய்கறி பயிர்களுக்கு, உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். மழைநீர் தேங்கி இருந்தால், வடிகால் வசதி செய்ய வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்து, பலத்த மழை, காற்றின் பாதிப்பிலிருந்து பயிர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இத்தகவலை தோட்டக்கலை துறை துணை இயக்குனர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.