/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு! ஸ்தம்பிக்கும் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம்
/
ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு! ஸ்தம்பிக்கும் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம்
ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு! ஸ்தம்பிக்கும் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம்
ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு! ஸ்தம்பிக்கும் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம்
ADDED : அக் 21, 2024 10:56 PM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க விற்பனையாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளதால், அத்தியவசிய பொருள்கள் விநியோகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பில், கூட்டுறவு வங்கிகளின் கீழுள்ள ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் அபராத தொகை இரு மடங்கு வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்.
ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருள்களை அதிகளவில் இறக்கி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும், மாநிலம் முழுவதும், ரேஷன் கடை பணியாளர்களை, அவர்களுக்கு அருகாமையில் உள்ள பகுதிக்கு, இடம் மாற்ற செய்ய வேண்டும், ஆகிய 3 அம்ச கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி, நேற்று முதல் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும், தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் நேற்று காலை 10:00 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 152 கூட்டுறவு சங்கங்களில், 147 கூட்டுறவு சங்கங்களில் உள்ள 1,000 பேர் வரை இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக, டாக்பியா சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதனால், மாவட்டத்தில் பல ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தன.
தீபாவளி பண்டிகை நெருங்கும் காலத்தில், கூட்டுறவு சங்க விற்பனையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அத்தியவசிய பொருள்கள் விநியோகம் பாதிக்கும் என சங்கத்தினர் தெரிவித்துள்ளதால், பொது மக்கள் தவிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள மாவட்ட டாக்பியா சங்க அலுவலகத்தில், தொடர் வேலை நிறுத்த போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது.
மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். செயலாளர் அனந்தசயனம், பொருளாளர் மூர்த்தி, மண்டல நிர்வாகி ஏழுமலை, துணை தலைவர்கள் முத்து, சேகர், ஞானசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள், சங்கத்தினர் பலர் கலந்துகொண்டு, தொடர் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
தொழிற்சங்கத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.