/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வு கூட்டம்
/
கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வு கூட்டம்
ADDED : ஆக 04, 2025 01:29 AM

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் சார்பில் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், 72வது கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள், சிறப்பு சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், 50 சதவீத மானியத்தில் 250 நாட்டு கோழி குஞ்சுகள் வழங்குதல், தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தில் கறவை பசுக்கள் காப்பீடு திட்டம், 21வது கால்நடை கணக்கெடுக்கும் பணிகள், கால்நடை வளர்ப்போருக்கு, 50 சதவீத மானியத்தில் வழங்க உள்ள புல் நறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தினர்.
தெருநாய்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்துதல் திட்டம், 50 சதவீத மானியத்தில் தீவன பயிர் சாகுபடி திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்திற்கு கால்நடை வளர்ப்போர் மூலம் பால் உற்பத்தியை அதிகரித்து வழங்கிட கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களுக்கு முகாம்கள் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பிரசன்னா, துணை இயக்குநர் செந்தில்நாதன், ஆவின் பொது மேலாளர் ராஜேஷ், துணைப் பதிவாளர் ஸ்ரீகலா, உதவி இயக்குநர்கள் தண்டபாணி, ஜெய்சிராணி, மருத்துவர் பாலாஜி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.