விவசாயிகளுக்கு உரம், விதை வழங்க... ஏற்பாடு:மாவட்டத்தில் இருப்பு வைத்து விநியோகம்
விவசாயிகளுக்கு உரம், விதை வழங்க... ஏற்பாடு:மாவட்டத்தில் இருப்பு வைத்து விநியோகம்
UPDATED : செப் 28, 2026 05:22 AM
ADDED : செப் 27, 2026 06:21 PM

விழுப்புரம்,:விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விதை, உரம், நீர்பாசனம், இடுபொருட்கள், மண்வள தகவல் வேளாண்மை துறை மூலம் தடையின்றி வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்ணை இணை இயக்குநர் (பொறுப்பு) சுரேஷ் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை காலத்தில், மாவட்டத்தில் ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் 359.24 மி.மீ., மழை பெய்துள்ளது. இதையொட்டி, அதிகளவு பயிர் சாகுபடி கிணற்று நீர் பாசனம், ஆழ்துளை கிணற்று நீர் பாசனத்தில் நடக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம், சொர்ணாவாரி, சம்பா 21 ஆயிரத்து 406 எக்டரில் நெற்பயிர் சாகுபடியை விவசாயிகள் செய்துள்ளனர். இதில், தமிழக அரசு குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட நெல் இயந்திர நடவு இனத்தின் கீழ் 12 ஆயிரத்து 705 ஏக்கருக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 13 ஆயிரத்து 322 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
145 மெட்ரிக் டன் குறுகிய கால நெல் சான்று விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், 55.7 மெ.டன் நெல் நுண்ணுாட்ட உரம், 6,675 லிட்டர் திரவ உயிர் உரம், 109 மெ.டன் நெல்லுக்கு உற்பத்தி மானியம் வழங்கியதன் மூலம் 28 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
வரும் சம்பா பருவத்தில் 60 ஆயிரம் எக்டர் சாகுபடி செய்யும் நோக்கில், தேவைப்படும் 740 மெ.டன் நெல் விதைகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைத்து, தங்கு தடையின்றி நெல் சிறப்பு திட்டத்தின் கீழ் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் தற்போது வரை தானிய பயிர்களான கம்பு, ராகி, திணை, மக்காச்சோளம் பயிர்கள் 8,866 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர். 35.138 மெ.டன் கம்பு, ராகி, தினை விதைகள் விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் திட்டத்தில் செயல்விளக்க திடல்கள் அமைக்க முழு மானியத்திலு பிற விவசாயிகளுக்கு ஒரு கிலோ 30 ரூபாய் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.
5,000 எக்டர் தானிய பயிர்கள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கும் வகையில், அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் 28 மெட்ரிக் டன் கம்பு, ராகி, திணை விதைகள், 5.65 மெ.டன் மக்காசோளம் வீரிய விதைகளும் இருப்பு வைத்து விநியோகம் செய்யப்படுகிறது.
அதே போல், 25 மெ.டன் உளுந்து விதைகள், மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்து, 1,233 எக்டர் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயறுவகை பயிர்கள் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி பட்டத்தில் அதிகளவு பயிரிடுவதால், 34 ஆயிரம் எக்டர் சாகுபடி செய்யும் நோக்கில், 275 மெ.டன் உளுந்து விதைகள் மத்திய, மாநில அரசு திட்டத்தில் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தாண்டு 1,018 விவசாயிகளுக்கு மண் வளம் குறித்து விழிப்புணர்வு செய்து, மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மண் தன்மை, சத்துகள் குறித்த மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 6,713 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, மாவட்டத்தில் பயிர்களுக்கு தேவையான ரசாயன உரங்கள் யூரியா 8347 மெ.டன், டி.ஏ.பி 2680 மெ.டன், பொட்டாஷ் 1514 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 10304 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1985 மெ.டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்து விநியோகம் செய்யப்படுகிறது.
இத்தகவலை வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) சுரேஷ் தெரிவித்துள்ளார்.
