/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆற்றுத்திருவிழா; 1200 போலீசார் பாதுகாப்பு
/
ஆற்றுத்திருவிழா; 1200 போலீசார் பாதுகாப்பு
ADDED : ஜன 17, 2025 11:04 PM
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில், இன்று 24 இடங்களில் ஆற்றுத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், பொங்கல் பண்டிகை நிறைவு நாளாக இன்று ஆற்றுத்திருவிழா நடைபெற உள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அருகே பிடாகம், அத்தியூர் திருவாதி, பேரங்கியூர், ஏனாதிமங்கலம், எல்லீஸ் சத்திரம், அண்ராயநல்லூர், அரகண்டநல்லூர், புதுப்பாளையம், மேட்டுப்பாளையம், சின்னகல்லிப்பட்டு, கலிஞ்சிக்குப்பம் பகுதிகளிலும், விக்கிரவாண்டி அருகே வீடூர் அணை உள்ளிட்ட 24 இடங்களில், பொது மக்கள் ஆறுகளில் திரண்டு வந்து, ஆற்றுத்திருவிழா கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
விழுப்புரம், புதுச்சேரி சுற்றுப்பகுதி பொது மக்கள் அருகே உள்ள ஆறுகளுக்கு குடும்பத்தோடு திரண்டு வந்து, நீராடியும், கோவில் உற்சவர்களை வழிபட்டும், விளையாடியும் மகிழ்வார்கள். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து, கோவில் உற்சவ மூர்த்திகள் ஆறுகளுக்கு கொண்டு வந்து தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது.
இந்தாண்டு ஆறுகளில் தண்ணீர் செல்வதால், மகிழ்ச்சியான கொண்டாட்டத்திற்கு அதிகளவில் பொது மக்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்ட ஆற்று திருவிழா பாதுகாப்பு பணியில் எஸ்.பி., சரவணன் தலைமையில், 2 ஏடிஎஸ்பிக்கள், 7 டிஎஸ்பி.,க்கள் முன்னிலையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.