விழுப்புரம் : தமிழ்நாடு மாநில சமரச மற்றும் இணக்கமுறை மையத்தின் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட சமரச மைய தலைவரான மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மணிமொழி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'அனைத்து நீதிமன்றங்களிலும் சமரச மையம் செயல்பட்டு வருகிற நிலையில், பொதுமக்கள் தங்கள் வழக்குகளை நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர்கள் மூலமாகவோ ஆஜராகும்போது, வழக்கை சமரச மையத்திற்கு அனுப்ப கூறலாம். சமரச மையத்தில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் ரகசியமாக காக்கப்படும். சமரசத்தின் மூலம் வழக்குகளில் எவ்வித மேல்முறையீடும் இன்றி விரைவாகவும், கட்டணம் ஏதுமின்றி தீர்வு காணப்படும்,' என்றார்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நிறைவடைந்தது. இதில் அரசு சட்டக் கல்லுாரி மாணவ, மாணவிகள், வழக்கறிஞர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.