/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாழை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டுகோள்
/
வாழை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டுகோள்
ADDED : நவ 15, 2025 05:00 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வட்டார வாழை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் ஜெர்மன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் ரபி 2025 பருவத்தில் பயிரிடப்படும் வாழைப் பயிர்கள் இயற்கை இடர்கள் மூலம் ஏற்படும் சேதங்களுக்கு காப்பீடு பெறலாம்.
வாழை பயிர் ஏக்கருக்கு 1147.51 ரூபாய் காப்பீட்டு தொகைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை, கம்பு, சோளம் போன்ற இதர பயிர்களும் இத்திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கி, பொது சேவை மையங்களில் பயிர் காப்பீடுக்கு விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
வேர்க்கடலை, கம்பு, சோளம் பயிர்களுக்கு வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியும், வாழை பயிருக்கு பிப்ரவரி 28ம் தேதி பயிர் காப்பீடு செய்ய கடைசி நாளாகும்.
மேலும், விபரங்களுக்கு தேசிய உதவி எண்.14447 அல்லது பாப்பனப்பட்டு தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

