/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பி.இ., பட்டதாரி பெண் சாவு; உறவினர்கள் சாலை மறியல்
/
பி.இ., பட்டதாரி பெண் சாவு; உறவினர்கள் சாலை மறியல்
ADDED : ஜூன் 12, 2025 10:46 PM

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுாரில் பி.இ., பட்டதாரி பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருவெண்ணெய்நல்லுார், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி கவுசல்யா, 29; பி.இ., பட்டதாரி. இவருக்கு கடந்த 10ம் தேதி அதிகாலை 4:00 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடன், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற சில நிமிடங்களில் கவுசல்யா மயங்கி விழுந்தார்.
மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபின், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
அதன்பேரில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில் இறந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி திருவெண்ணெய்நல்லுார் - அரசூர் பிரதான சாலையில் நேற்று மதியம் 2:30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படும் என சமாதானம் செய்ததைத் தொடர்ந்து 3:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.