/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுக்குப்பத்தில் கரை ஒதுங்கிய வாலிபர் சடலம்; ஓட்டல் ஊழியரை கொன்று கடலில் வீசியது அம்பலம் 3 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை

ADDED : டிச 10, 2024 07:14 AM

கோட்டக்குப்பம், : கோட்டக்குப்பம் அருகே வாலிபர் சடலம் கரையொதுங்கிய சம்பவத்தில், அவரை கொலை செய்து கடலில் வீசியது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் கடற்கரையில் நேற்று முன்தினம் உடலில் வெட்டு காயங்களுடன் வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது. கோட்டக்குப்பம் போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில், இறந்து கிடந்த வாலிபர், கோட்டக்குப்பம் மரக்காயர் தோப்பை சேர்ந்த கதிரவன் மகன் சிவா, 23; இவர், புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். நஸ்ரின் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, இஸ்லாமிய மதத்திற்கு மாறி உள்ளார். திருமணத்திற்கு முன் சிவா, லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வந்தது தெரிய வந்தது.
நேற்று பிரேத பரிசோதனை அறிக்கையில், சிவாவின் கழுத்து கத்தியால் வெட்டப்பட்டும், இடுப்பு பகுதி கத்தியால் குத்தப்பட்டும் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சிவாவின் மனைவி நஸ்ரினிடம், போலீசார் விசாரணை செய்ய முயன்றபோது, அவர் கேரளாவில் இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று வரவழைத்து விசாரித்தனர்.
அதில், கடந்த 6ம் தேதி ஓட்டல் வேலைக்கு சென்ற சிவா, அன்று மாலை தனது மனைவியிடம் வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. நஸ்ரின், தனது அக்காவை வெளிநாட்டிற்கு வழி அனுப்ப கடந்த 7ம் தேதி கேரளாவிற்கு சென்றார். தனது கணவர் காணாமல் போனது குறித்து உறவினர்களுக்கு போனில் தெரியப்படுத்தி உள்ளார் என தெரிந்தது.
அதனைத் தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலையில் கோட்டக்குப்பம் முதல் கூனிமேடு வரையிலான சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஒரு கும்பல் சிவாவை தனியாக அழைத்து சென்றது தெரிய வந்தது. சந்தேகத்தின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.