/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வனத்துறையினர் அலட்சியத்தால் டிமிக்கி கொடுக்கும் மர்ம விலங்கு; அச்சத்தில் கால்நடை வளர்ப்போர்
/
வனத்துறையினர் அலட்சியத்தால் டிமிக்கி கொடுக்கும் மர்ம விலங்கு; அச்சத்தில் கால்நடை வளர்ப்போர்
வனத்துறையினர் அலட்சியத்தால் டிமிக்கி கொடுக்கும் மர்ம விலங்கு; அச்சத்தில் கால்நடை வளர்ப்போர்
வனத்துறையினர் அலட்சியத்தால் டிமிக்கி கொடுக்கும் மர்ம விலங்கு; அச்சத்தில் கால்நடை வளர்ப்போர்
ADDED : ஜூலை 22, 2025 06:40 AM
செ ஞ்சி அருகே கால்நடைகளை வேட்டையாடும் மர்ம விலங்கை பிடிப்பதில் வனத்துறை அலட்சியமாக இருப்பதால் கால்நடை வளர்ப்போர் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த ஓராண்டில் செஞ்சி, மேல்மலையனுார் பகுதியில் எதப்பட்டு, கோட்டப்பூண்டி, மாதப்பூண்டி, நல்லாண்பிள்ளை பெற்றாள் மற்றும் கண்டாச்சிபுரம் பகுதி கிராமங்களில் மர்ம விலங்கு கடித்து ஏராளமாக கால்நடைகள் இறந்தன. அப்போது மர்ம விலங்கை பிடிக்க வனத்துறையினர் எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்க வில்லை.
சில மாதம் எந்த தாக்குதலும் இல்லாத நிலையில் திடீரென கடந்த மாதம் 27ம் தேதி கொங்கரப்பட்டு கிராமத்தில் துவங்கி ரெட்டணை, அவியூர், வீரணாமூர் உள்ளிட்ட கிராமங்களில் அடுத்தடுத்து மர்ம விலங்கு தாக்கி 20க்கும் மேற்பட்ட கால் நடைகள் இறந்தன.
நேற்று முன்தினம் கொங்கரப்பட்டு அடுத்த ஆசூர் கிராமத்தில் கன்று குட்டியை கடித்து கொன்றது. இதே போல் தாக்குதல் நடந்த கிராமங்களில் செஞ்சி, திண்டிவனம் வனத்துறையினரும் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்தும், பிடிப்பதற்கு கூண்டும் வைத்துள்ளனர். ஆனாலும் மர்ம விலங்கு கேமராவில் இதுவரை சிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி வீரணாமூரில் மர்ம விலங்கு தாக்கி சென்ற பகுதியில் இரண்டு விலங்கின் கால்தடங்கள் பதிவாகி இருந்ததை வனத்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். அதில் ஒரு கால்தடம் சிறியதாக இருந்துள்ளது. அது மர்ம விலங்கின் குட்டியாக இருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.
மர்ம விலங்கை கண்டறிய இறந்த வெள்ளாடுகளின் உடலில் மர்ம விலங்கு கடித்த இடத்தில் இருந்து உமிழ்நீரை கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் சேகரித்து வனத்துறையினர் டி.என்.ஏ., சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த சோதனை முடிவுக்கு வனத்துறையினர் காத்திருக்கின்றனர். ஆனால் மர்ம விலங்கு எதற்கும் காத்திராமல் தினமும் வேட்டியாடி வருகிறது. இது விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
2014ம் ஆண்டு அன்னமங்கலம் மலையடிவார கிராமங்களான சோழங்குணம், இல்லோடு, சமத்தகுப்பம் கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். ஆனால் அதனை பிடிக்க முடியவில்லை. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மர்ம விலங்கு நடமாட்டம் இருந்து வருகிறது. பொதுவாக கழுதைப்புலிகள் நீர் நிலைகளை ஒட்டி உள்ள புதர் மற்றும் முள் காடுகளில் தனியாக பதுங்கி முயல், நாய், ஆடு, கன்று குட்டிகளை வேட்டையாடும்.
கழுதைப் புலிகள் வேட்டையாடும் பாணியில் செஞ்சி பகுதியில் தற்போது வேட்டை நடந்து வருகிறது. அத்துடன் தொண்டியாற்றையொட்டி நீர்நிலை அருகே உள்ள விவசாய நிலங்களில் உள்ள கால்நடைகளையே மர்ம விலங்கு தாக்கி வருகிறது. கடந்த 18ம் தேதி கொங்கரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் காலை 11:00 மணியளவில் மர்ம விலங்கை பார்த்துள்ளனர். அவர்கள் சொல்லும் அடையாளங்கள் கழுதைப்புலியை ஒத்து உள்ளன.
எனவே இப்பகுதியில் உலா வரும் மர்ம விலங்கு கழுதை புலிதான் என கிராம மக்கள் உறுதியாக கூறி வருகின்றனர்.