/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு கட்டும் பணிகளை விரைவுபடுத்த கலெக்டர் அறிவுரை
/
வீடு கட்டும் பணிகளை விரைவுபடுத்த கலெக்டர் அறிவுரை
ADDED : செப் 17, 2025 12:15 AM

விழுப்புரம்; மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
விழுப்புரம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அரசின் வீடு கட்டும் திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றம் குறித்தும்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், துாய்மை பாரத இயக்கம் போன்ற பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும், அனைத்து வீடு கட்டும் திட்டங்களின் கீழ், ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றப் பணிகள் குறித்தும் திட்ட அலுவலர்களிடம், கலெக்டர் விரிவாக கேட்டறிந்தார்.
மேலும், கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் மறு சீரமைப்புத் திட்டம், அனைத்து ஊராட்சிகளிலும் நடந்து வரும் வீடுகளின் கட்டுமானப்பணிகளின் நிலவரம் குறித்தும், வீடுகள் கட்டுவதற்கு பணி ஆணை வழங்கி அதன் பிறகு கட்டப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றம் குறித்தும் விரிவாக கேட்டறிந்து, நிலுவையில் உள்ள கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்திட கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பத்மஜா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கண்ணன் உட்பட முக்கிய துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.