/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பருவமழை குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர்... ஆலோசனை; முன் அனுபவத்தை கொண்டு செயல்பட அட்வைஸ்
/
பருவமழை குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர்... ஆலோசனை; முன் அனுபவத்தை கொண்டு செயல்பட அட்வைஸ்
பருவமழை குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர்... ஆலோசனை; முன் அனுபவத்தை கொண்டு செயல்பட அட்வைஸ்
பருவமழை குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர்... ஆலோசனை; முன் அனுபவத்தை கொண்டு செயல்பட அட்வைஸ்
ADDED : ஆக 07, 2024 05:50 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், கடந்தாண்டு பருவமழை காலத்தில் ஏற்பட்ட அனுபவம் மற்றும் இடர்பாடுகளை நினைவில் கொண்டு, எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில், முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடந்தது. கலெக்டர் பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை பொழியும்.
இது தொடர்பாக புயல், மழை, வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படவுள்ளது. அறையில் 04146-223265 மற்றும் 1077 என்ற தொலைபேசி எண்களும் 7200151144 வாட்ஸ்ஆப் எண்ணும் செயல்படும்.
பேரிடர் காலங்களில் பாதிப்பு உள்ளாகும் பகுதிகளில், காவல்துறை, தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்பு படை, ஊர்காவல் படை, தேசிய மாணவர் படை ஆகிய பிரிவினரை ஒருங்கிணைத்து தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.
அனைத்து மண்டல அலுவலர்கள், உடனடியாக அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தினை நடத்தி, மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும்.
தினசரி மழையளவு விவரம், மழை நிலவர அறிக்கை, வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு, வீடுகள் பாதிப்பு விவரங்களை உடனுக்குடன் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக அனைத்து வட்டாட்சியர்கள் தவறாமல் தெரிவிக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் அதிகம் பாதிக்கக் கூடிய 8 இடங்கள், மிதமாக பாதிக்கக் கூடிய இடங்கள் 35, குறைவாக பாதிக்கக் கூடிய இடங்கள் 79 என மொத்தம் 122 இடங்கள் கண்டறியப்பட்ட இடங்களின் வழித்தடங்களை தயார் செய்து, பேரிடர் மேலாண்மை பிரிவில் மூன்று தினங்களில் ஒப்படைக்க வேண்டும்.
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட முன் அனுபவம் மற்றும் இடர்பாடுகளின் நினைவில் கொண்டு எதிர்வரும் பருவமழை காலத்தில் தகுந்த முன்னேற்பாடு பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். மழை நேரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள கிராமங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
மழை வெள்ளங்களில் பாதிக்கக்கூடிய கிராமங்களில் பேரிடர் ஒத்திகை தொடர்பான பயிற்சிகள் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பேரிடர் நேரங்களில் வி.ஏ.ஓ.க்கள், கிராம உதவியாளர்கள், பஞ்சாயத்து எழுத்தர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் போன்ற கிராம அளவிலான பணியாளர்கள் அவரவர் பணிபுரியும் இடத்தில் கட்டாயம் தங்கி இருக்க வேண்டும்.
நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் அகற்றி, அதன் தொடர்பான விவரங்களை பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு வாராந்திர அறிக்கை அனுப்ப வேண்டும்.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில், நீர் நிலைகள், குட்டைகள், திறந்தவெளிக்கிணறுகள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்புள் அகற்றப்பட்டுள்ளதா எனவும், நீர்நிலைகளில் உடைப்புகள் மற்றும் பழுதுகள் உள்ளனவா என்பதையும் கண்டறிந்து, அவைகளை உடனடியாக சரிசெய்திட வேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களில், அனைத்துத்துறை அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் எஸ்.பி., தீபக் சிவாச், டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷிநிகம் உள்ளிட்ட அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.