ADDED : ஜன 16, 2024 06:30 AM

விழுப்புரம் : விழுப்புரம் நகரில் முக்கிய சாலைகளில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
விழுப்புரம், புதிய, பழைய பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், பூங்கா, மேம்பாலம் உள்ளிட்ட பல இடங்களில் மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இது குறித்து, பல்வேறு தரப்பினர் புகார் அளித்ததால் நகராட்சி நிர்வாகம், கடந்த மாதம் மாடு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. மாடுகள் பிடித்து ஏலம் விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதன் பிறகு, நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக 2 நாட்கள் சாலையில் திரிந்த 40 மாடுகளைப் பிடித்து, பழைய நகராட்சி அலுவலகத்தில் சிறை வைத்தனர். பின், மாடு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்து, எச்சரித்து விடுவிக்கப்பட்டது. ஆனாலும், விழுப்புரத்தில் மாடு வளர்ப்போர், அலட்சியமாக மாடுகளை வெளியே திரிய விடுவதால் மீண்டும் பல இடங்களில் மாடுகள் திரிகின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் செல்லும்போது மாடுகள் மிரண்டு ஓடுவதால் விபத்து ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
மாடுகள் சுற்றித் திரிவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம், காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.