4.5 சவரன் நகை திருட்டு
கண்டமங்கலம் அருகே உள்ள கலித்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜயரங்கன் 40; தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி பிருந்தாவதி 36; ஆஸ்துமா நோயாளி. புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 24ம் தேதி சிகிச்சை முடிந்து திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 சவரன் தாலி செயின் உள்பட 4.5 சவரன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு
கிளியனுார் அடுத்த தேற்குணம் பகுதியை சேர்ந்தவர்கள் மருதமலை மனைவி லட்சுமி, 38, சந்திரசேகர். இருவரது குடும்பத்திற்கும் முன்விரோதம் உள்ளது. கடந்த 6ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சந்திரசேகர், அவரது மகன் தனசேகர், அதே பகுதியை சேர்ந்த சரவணன் ஆகியோர் லட்சுமியை தாக்கி, வீட்டின் கதவை உடைத்து, உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.
காயமடைந்த லட்சுமி, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லட்சுமி புகாரின் பேரில், சந்திரசேகர், தனசேகர், சவரணன் ஆகியோர் மீது கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
வானூர் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் போலீசார் நேற்று காலை ரங்கநாதபுரம் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். அவ்வழியாக நடந்து வந்த வாலிபரை மடக்கி சோதனை செய்தனர். அவர், பையில் 43 மதுபாட்டில்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. விசாரணையில், மணலுார்பேட்டை சித்தம்பட்டிணத்தை சேர்ந்த ரவி மகன் சத்திய பிரகாஷ், 25; என்பதும், மது பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
குட்கா விற்றவர் கைது
கண்டமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு பாக்கம் கூட்ரோடு மற்றும் கோண்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடலுார் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் ஆய்வு செய்தனர். அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து 30 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் பாலசந்தர், 30; என்பவரை கைது செய்தனர்.
பைக் திருட்டு
கிளியனுார் ஆசாரி தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் தமிழரசன், 29; புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரிகிறார். கடந்த 14ம் தேதி இவரது பல்சர் பைக்கை அப்பகுதியில் நிறுத்தி விட்டு பணிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
திண்டிவனம், மேல்பேட்டை ரோட்டிலுள்ள கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி அருகே நேற்று ரோஷணை சப்இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். கல்லுாரி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை நடத்தினர். அவர்களிடம் 5 கிராம் எடையுள்ள 20 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடமிருந்து மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், அவர்கள் மேல்பாக்கம் மேட்டுத்தெரு பாஸ்கர் மகன் ஆகாஷ், 19; விழுக்கம் கிராமம் சுரேஷ் மகன் ஷியாம், 19; ஆகியோர் என, தெரிய வந்ததது. இருவரை போலீசார் கைது செய்தனர்.
வீட்டில் மதுபாட்டில் பதுக்கியவர் கைது
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அதே பகுதியைச் சேர்ந்த அமாவாசை,63; என்பவரது வீட்டில் விற்பதற்காக 120 சிறிய ரக புதுச்சேரி மதுபாட்டில்கள், குட்கா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதனையடுத்து, அமாவாசை,63; மற்றும் அதே பகுதியை சேர்ந்த கோகுல், 24; ஆகியோர் மீது, தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, அமாவாசையை கைது செய்தனர். மதுபாட்டில்கள், குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.