இரு தரப்பு தகராறு: 2 பேர் கைது
ரிஷிவந்தியம்: வாணாபுரம் அடுத்த மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு மகன் ஏழுமலை, 34; இவரது நண்பர் ரஞ்சித்குமார். இருவரும் கடந்த 14ம் தேதி அத்தியூர் சந்தைமேட்டில் சாப்பிட்டனர். அப்போது, அங்கு மது அருந்திய அத்தியூரைச் சேர்ந்த கண்ணன் மகன் ரமேஷ் தரப்பினருக்கும், ஏழுமலை தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஏழுமலை, ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் ரமேஷ் தரப்பினர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் ரமேஷ், 26; பழனி மகன் ஏழுமலை, 22; ஆகிய இருவரையும் பகண்டைகூட்ரோடு போலீசார் கைது செய்தனர்.
மொபட்டில் இருந்து விழுந்தவர் பலி
சின்னசேலம்: எலவடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 36; இவர், கடந்த 10ம் தேதி இரவு 8:00 மணியளவில் மொபட்டில் வீட்டிற்கு சென்றார். சின்னசேலம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த மணிவண்ணன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று காலை இறந்தார். சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தாய் மாயம்: மகன் புகார்
விழுப்புரம்: பில்லுார் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மனைவி பரமேஸ்வரி, 45; இவர், மனநலம் பாதித்தவர். கடந்த 14ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற இவரை காணவில்லை. இவரது மகன் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
பஸ், கார் மோதி 2 பேர் காயம்
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அடுத்த தகடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 45; அரசு பஸ் டிரைவர். இவர், நேற்று முன்தினம், திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ் அய்யங்கோவில்பட்டு பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த கியா கார், பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரை ஓட்டி வந்த சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த பாபு மகன் சதீஷ்குமார், 32; கொளத்துார் ஜோவில்ஆலோசிக்ஸ், 46; ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மதுபாட்டில் விற்றவர் கைது
திண்டிவனம்: டவுன் போலீசார் நேற்று காலை 10:00 மணியளவில் கிடங்கல் (1) பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ரேஷன் கடை அருகே அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், 37; புதுச்சேரியிலிருந்து வாங்கி வந்த மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. உடன் அவரிடமிருந்த 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.
மொபட்டில் சென்றவர் விழுந்து பலி
திருவெண்ணெய்நல்லுார்: கொங்கராயனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி 49; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 7:15 மணியளவில் திருக்கோவிலுாரில் இருந்து மடப்பட்டு நோக்கி மொபட்டில் சென்றார். இளந்துறை மேட்டுக்குப்பம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது. நாய் குறுக்கே வந்ததால், பிரேக் போட்டபோது நிலை தடுமாறி சாலையில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த ராஜா முகமது என்பவர் மீது மோதியதில் அவர் காயமடைந்தார். மேலும் கருணாநிதி மொபட்டுடன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.