ADDED : ஜூன் 23, 2025 04:54 AM
தொழிலாளி தற்கொலை
விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூரை சேர்ந்தவர் ரங்கநாதன், 50; கூலித் தொழிலாளி. இவர் குடிப்பழக்கத்தால் அல்சர் நோயால் பாதிக்கப்பட்டு வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். கடந்த 20ம் தேதி மாலை வயிற்று வலி அதிகமானதால் பூச்சி மருந்து குடித்து மயங்கினார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். கெடார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதியவரை தாக்கியவர் மீது வழக்கு
விழுப்புரம் அடுத்த பள்ளியந்துாரைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 65; கூலித் தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான வீட்டுமனையை, மகள் மகேஸ்வரிக்கு எழுதிகொடுக்க முயற்சி செய்தார். இதனையறிந்த சுப்ரமணியின் அண்ணன் பிச்சைக்காரன் மகன் தரணிதரன், 40; தனக்கு எழுதிக் கொடுக்குமாறு கூறினார். மறுப்பு தெரிவித்த சுப்ரமணி திட்டி, தாக்கினார். காணை போலீசார், தரணிதரன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விழுப்புரம் அடுத்த தெளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 65; விவசாயி. இவர், கடந்த 6 மாதங்களாக உடல் வலியால் அவதியடைந்து வந்தார். இதனால், மனமுடைந்த அவர் கடந்த 13ம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
லாரி மோதி தனியார் ஊழியர் பலி
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர், 39; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் தனது பைக்கில் திருவெண்ணெய்நல்லுாரில் இருந்து விழுப்புரம் சென்றார். ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்று மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. இதில், உடல் நசுங்கி சிவசங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கல்லுாரி மாணவி தற்கொலை
கிளியனுார் அடுத்த கீழ்கூத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் ஓவியா, 18; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.எஸ்சி., கணிதவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் வேலை செய்யாமல் இருந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால் கோபித்துக்கொண்டு, கொந்தமூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றவர் அங்கு அதிகமாக உயர் ரத்த அழுத்த மாத்திரைகளை விழுங்கினார். உடன், புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
குட்கா விற்ற 3 பேர் கைது
விழுப்புரம் மேற்கு போலீசார் திருவள்ளுவர் நகரில் ரோந்து சென்றனர். அங்கு, புகையிலை பொருட்களை விற்பனை செய்த விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந்த மணி,78; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
அதே போல், காணை போலீசார் மாம்பழப்பட்டு, கோழிப்பட்டு கிராமங்களில் ரோந்து சென்ற போது, குட்கா பொருட்கள் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மனைவி கவிதா, 35; கோழிப்பட்டு பஞ்சாமிர்தம் மகன் பாக்கியராஜ், 36; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
தாய் மாயம்: மகன் புகார்
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அரவிந்தர் நகரைச் சேர்ந்தவர் வடிவேல் மனைவி ராமலட்சுமி, 65; சிறிது மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இவர், கடந்த 15ம் தேதி புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மகன் ஞானவேல் அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.