இரு தரப்பு மோதல்: 3 பேர் கைது
விழுப்புரம் அடுத்த திருப்பாச்சனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகள் ஷாலினி, 21; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் ஞானவேல், 35; இவரது வீட்டில் வளர்க்கும் நாய் நேற்று ஷாலினி வீட்டு நாயை கடித்துள்ளது. இதை தட்டிக்கேட்டதால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பு புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் 10 பேர் மீது வழக்குப் பதிந்து ஜெயபால் மகன் சக்திவேல், 37; ஜெயபால், 65; சுப்ரமணி மகன் சக்திவேல், 40; ஆகியோரை கைது செய்தனர்.
மனைவி மாயம்: கணவர் புகார்
காணையைச் சேர்ந்தவர் அருணகிரி மனைவ ஜெனிபர், 23; திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜெனிபர் மீண்டும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி கிராமத்தில் புதிதாக வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்துார் கிராமத்தைச் சேர்ந்த மணிபாலன் மகன் தேவராஜ், 31; கொத்தனார் வேலை செய்து வந்தார். நேற்று முதினம் மாலை 4:30 மணிக்கு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மின்கம்பியில் தேவராஜ் கை தவறுதலாகப்பட்டு மின்சாரம் பாய்ந்து. சம்பவ இடத்திலேயே இறந்தார். அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அரசு ஊழியர் தற்கொலை
செஞ்சி, பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 37; செஞ்சி தாலுகா அலுவலகத்தில் பதிவு தட்டச்சு எழுத்தராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் செய்வதற்காக வீட்டில் பெண் பார்த்து வந்தனர்.
பெண் கிடைக்காமல் தாமதம் ஆகி வந்ததால் விரக்தி அடைந்த மோகன் நேற்று மாலை 3:00 மணியளவில் தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வேகமாக பைக் ஓட்டியவர் கைது
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார், நேற்று காலை கெங்கராம்பளையம் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செங்காடு மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சத்தியாகு மகன் ராஜா, 28; என்பவர், பைக்கில் அதிவேகமாக, பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் ஓட்டிச்சென்றார். இதனையடுத்து, அவர் மீது அதிவேகமாக, ஆபத்தான வகையில் பைக் ஓட்டியதாக, போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.
2 குழந்தைகளுடன் தாய் மாயம்
மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன், 30; இவரது மனைவி சந்திரலேகா, 25; இவர்களுக்கு திருமணமாகி, ஹேமந்த், 3; கார்த்திகா, 1; என 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதால், சந்திரலேகா, கோபித்துக்கொண்டு தனது 2 பிள்ளைகளுடன் கடந்த 30ம் தேதி மாலை பஸ்சில் விழுப்புரம் வந்துள்ளார்.
புதிய பஸ் நிலையத்தில் நின்றிருந்த அவர்களை மீட்டு, சமூக ஆர்வலர் காயத்ரி என்பவர், விழுப்புரம் பெரியார் நகரில் உள்ள ஒரு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத் தார். நேற்று காலை பார்த்தபோது, சந்திரலேகா அவரது 2 குழந்தைகளுடன், காணாமல் போனது தெரியவந்தது. இல்ல ஊழியர் பவானி, 22; அளித்த புகாரின் பேரில், வி ழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சாட்சியை மிரட்டியவர் கைது
விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன், 37; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 19ம் தேதி அதே பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகே அமர்ந்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி, 29; தன் மீதான கொலை வழக்கின் விசாரணையின் போது தனக்கு எதிராக சாட்சி சொல்ல கூடாது எனக் கூறி, ஜனார்த்தனனை மிரட்டினார். புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து பாலாஜியை கைது செய்தனர்.

