/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி கமிட்டியில் தினமும் நெல் கொள்முதல்... நடக்குமா? அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சி தேவை
/
செஞ்சி கமிட்டியில் தினமும் நெல் கொள்முதல்... நடக்குமா? அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சி தேவை
செஞ்சி கமிட்டியில் தினமும் நெல் கொள்முதல்... நடக்குமா? அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சி தேவை
செஞ்சி கமிட்டியில் தினமும் நெல் கொள்முதல்... நடக்குமா? அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சி தேவை
ADDED : பிப் 05, 2024 05:39 AM

செஞ்சி : தமிழகத்தில் அதிக நெல் வரும் மார்க்கெட் கமிட்டி என பெருமை பெற்ற செஞ்சி மார்க்கெட் கமிட்டியில், இடைவெளியின்றி தினமும் நெல் கொள்முதல் செய்ய அனைத்து தரப்பினரும் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் நுாற்றுக்கணக்கான மார்க்கெட் கமிட்டிகளை மாநில அரசு ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் விளை பொருட்களை விற்பனை செய்யும் போது எடை மற்றும் விலையில் மோசடி, பணம் பெறுவதில் கால தாமதம் ஆகிய இடர்பாடுகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கவும், மறைமுக ஏலம் மூலம் நல்ல விலை கிடைக்கவும், குறித்த நேரத்தில் பணம் பெறுவதற்கும் மார்க்கெட் கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டன.
இதில் நெல், வேர்க்கடலை, பல தானிங்கள் மட்டுமின்றி மஞ்சள், கொப்பறை, காய்கறி உட்பட பல்வேறு விளை பொருட்களை விற்பனை செய்கின்றனர். டெல்டா மாவட்டங்களில் ஏராளமான மார்க்கெட் கமிட்டிகள் உள்ளன. இருந்தாலும் நெல் வரத்தில் செஞ்சி மார்க்கெட் கமிட்டி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முதலிடத்தில் இருந்து வருகிறது.
இதற்கு காரணம், செஞ்சி பகுதியில் உள்ள காடு மலைகளில் இருந்து ஏரிகளுக்கு வரும் தண்ணீரிலும், நிலத்தடி நீரிலும் விளையும் நெல் ரகங்களில் தயாராகும் அரிசி இயற்கை சத்துடன் தரமாகவும், கூடுதல் ருசியுடனும் இருக்கும்.
இதனால் மற்ற இடங்களை விட செஞ்சி மார்க்கெட் கமிட்டி நெல்லுக்கு மாநிலம் முழுதும் நல்ல கிராக்கி உண்டு. இதன் காரணமாக செஞ்சி வியாபாரிகள் கூடுதல் விலைகொடுத்து நெல் கொள்முதல் செய்கின்றர்.
மற்ற இடங்களை விட கூடுதல் விலை கிடைப்பதால் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு நெல் கொண்டு வருகின்றனர்.
இதனால் சீசன் நேரத்தில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. கடந்த 15 ஆண்டுக்கு முன் வரை அனைத்து மூட்டைகளையும் அன்றே கொள்முதல் செய்தனர். இதனால் தான் செஞ்சி மார்க்கெட் கமிட்டி அதிக நெல் வரத்துள்ள மார்க்கெட் கமிட்டியாக மாறியது.
தற்போது நெல் மூட்டைகள் அதிகம் வந்தாலும் ஒரே நாளில் கொள்முதல் செய்வதில்லை. இடம், தொழிலாளர் பற்றாக்குறை, இ-நாம் முறை சிக்கல் என பல்வேறு பிரச்னையால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். மூட்டைகளை கையாள ஒன்று அல்லது இரண்டு நாள் அவகாசம் எடுத்துக் கொள்கின்றனர்.
இந்த நிலையை மாற்றி தினமும் நெல் கொள்முதல் செய்ய மார்க்கெட் கமிட்டி நிர்வாகம், வியாபாரிகள், மூட்டை மாற்றும் தொழிலாளர்களின் கூட்டு கூட்டம் நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்.
சீசன் நேரத்தில் பழைய பிட்டிங் முறையில் நெல் கொள்முதல் செய்யவும், கூடுதல் தற்காலிக தொழிலாளர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும்.
தினமும் குறிப்பிட்ட அளவு நெல் கொள்முதல் செய்வதை வியாபாரிகள் உறுதி செய்ய வேண்டும். விவசாயிகள் பல நாட்கள் காத்திருப்பதை தவிர்க்க முன்பதிவு முறையை தீவிரப்படுத்த வேண்டும்.
மார்க்கெட் கமிட்டி முன் விவசாயிகளின் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க கமிட்டி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள புதிய இடத்தில் வாகனங்களை நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வியாபாரிகள், தொழிலாளர்களுடன் மார்க்கெட் கமிட்டியின் உயர் அதிகாரிகள் கலந்துரையாடல் நடத்த வேண்டும். இதன் மூலம் மார்க்கெட் கமிட்டியின் தரத்தை உயர்த்தவும், விவசாயிகளின் குறைகளை நிறைவு செய்யவும், நல்ல பெயருடன் பாரம்பரிய பெருமையை நிலை நிறுத்தவும் வழி கிடைக்கும்.

